இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் பகல் இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆமதாபாதில் நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) தலைவரும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி தெரிவித்தார்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 5 டெஸ்ட் மற்றும் குறுகிய வடிவிலான போட்டிகளில் விளையாட உள்ளது.
இந்தத் தொடரில் ஒரு டெஸ்ட் போட்டி மட்டும் பகல்-இரவு ஆட்டமாக நடத்தப்படும். இதில் பிங்க் பால் பயன்படுத்தப்படும். அந்த டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடைபெறும் என்றும் பி.சி.சி.ஐ. தலைவர் சவுரவ் கங்குலி நேற்று தெரிவித்தார்.
இதன் மூலம் இந்தியாவில் 2-வது முறையாக பகல்-இரவு டெஸ்ட் நடைபெற உள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு இந்தியா-வங்கதேசம் அணிகள் இடையே கொல்கத்தாவில் பகல்-இரவு டெஸ்ட் போட்டி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து சவுரவ் கங்குலி கூறும்போது, “இங்கிலாந்து தொடரை எப்படி எந்தெந்த மைதானங்களில் நடத்துவது என்பதில் சில திட்டங்களை வைத்துள்ளோம். அதுதொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. ஆனால் போட்டிக்கு இன்னும் 4 மாதங்கள் இருப்பதால் இப்போதைக்கு எதையும் இறுதி செய்யவில்லை. ஐ.பி.எல். கிரிக்கெட் முடிந்ததும், இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு செல்ல உள்ளது. ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி ஓரிரு நாட்களில் தேர்வு செய்யப்படும். இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது. அப்போது ரஞ்சி கிரிக்கெட் போட்டியை எப்போது தொடங்குவது என்பது முடிவு செய்யப்படும்’ என்றார் கங்குலி.