மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் சிக்கி, 3 பெண்கள் உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

செங்குளம் கிராமத்தில் அமைந்துள்ள அழகர்சாமி என்பவருக்குச் சொந்தமான ராஜலட்சுமி ஃபையர் ஒர்க்ஸ் என்ற அந்த நிறுவனத்தில் வழக்கம் போல் 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், மதியம் 2 மணியளவில் பட்டாசு ஒன்றில் மருந்தை திணிக்கும்போது உராய்வு ஏற்பட்டு எதிர்பாராத விதமாக தீப்பொறி எழுந்ததாகக் கூறப்படுகிறது. அந்த தீப்பொறி மளமளவென அருகிலிருந்த பட்டாசுகளுக்கும் பரவி, அவை வெடிக்கத் தொடங்கின.
வெடி விபத்து ஏற்பட்டதும் அங்கிருந்த ஊழியர்கள் அலறி அடித்துக் கொண்டு அங்கிருந்து ஓடியுள்ளனர். இதனிடையே, அந்தக் கட்டிடம் முற்றாக இடிந்து தரை மட்டமானது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

விபத்தில், உள்ளே பணியில் இருந்தவர்களில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். 5 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்தவர்களின் விவரங்கள் இதுவரை தெரியாத நிலையில், அதுதொடர்பான விசாரணையும் நடைபெற்று வருகிறது.




