காஸாவிற்கு ஆதரவாக வரும் 14ந் தேதி சட்டமன்றத்தில் தீர்மானம்கொண்டு வரப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
காஸாவில் நடைபெற்று வரும் இனப்படுகொலையைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு அரசியல் கட்சிகறின் தலைவர்கள் பங்கேற்றுப் பேசினர்.

சென்னை எழும்பூரில் நடைபெற்ற இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காஸாவில் இஸ்ரேல் நிகழ்த்தும் இனப்படுகொலை உலக மக்களின் மனதை உலுக்குகிறது. மனிதநேயம் கொண்ட ஒவ்வொருவரும் இதைக் கண்டிக்கின்றனர். பாலஸ்தீன மக்களுக்கு நம் ஆதரவை மனப்பூர்வமாக வழங்குவோம். உணவுக்காக காத்திருந்தவர்கள் உயிர் பறிக்கப்பட்டது. உணவு பொருள் ஏற்றி வரும் லாரியை எதிர்பார்த்து காத்திருந்த போது 45 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். உணவு பொருட்கள், மருந்துகள், பால் பவுடர் எடுத்து சென்ற தன்னார்வலர்களை இஸ்ரேல் கைது செய்தது.

காசாவில் இரக்கமற்ற படுகொலைகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்; இஸ்ரேலுக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். காசாவில் நடைபெறும் இனப்படுகொலை மனதை உலுக்குகிறது; 11,000 பெண்கள், 17,000 குழந்தைகள், 175 பத்திரிக்கையாளர்கள், 125 ஐ.நா. ஊழியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 26,000 குழந்தைகள் பாலஸ்தீனத்தில் பெற்றோரை இழந்திருக்கிறார்கள். வரும் 14ந்தேதி சட்டமன்றம் கூட உள்ள நிலையில் காஸாவிற்கு ஆதரவாக தீர்மானம் கொண்டு வரப்படும் எனத் தெரிவித்தார்.




