பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மக்கள் சந்திப்பு யாத்திரையை அக்.12-ல் மதுரையில் தொடங்க உள்ளார்.
சட்டமன்றத் தேர்தலையொட்டி தமிழ்நாட்டின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் மக்கள் சந்திப்பு பிரச்சார பயணங்களை நடத்தி வருகின்றனர். திமுக தலைவர் ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டோர் ஏற்கனவே தங்களது பயணங்களைத் தொடங்கி மக்களையும், தொண்டர்களையும் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட வரலாறு திரும்புகிறது என்ற தலைப்பிலான மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் போது பெரும் அசம்பாவிதம் ஏற்பட்ட 41 பேர் பலியாகினர். இதனால் அவரின் பயணம் தற்காலிமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த அசம்பாவிதத்தைத் தொடர்ந்து இது போன்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளுக்கு முறையான வழிகாட்டல்களை வகுக்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், பல தலைவர்களின் சுற்றுப்பயணங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இது அரசியல் கட்சிகளிடையே பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் சுற்றுப்பயணமும் வரும் 12ந் தேதி தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக மதுரையில் தொடங்கி, தூத்துக்குடியில் நவ.22-ம் தேதி நிறைவு பெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ள இப்பயணத்தை, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தொடங்கி வைக்க உள்ளார். இதில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற கூட்டணி கட்சிகளையும் மேடையேற்றுவதற்கான பணிகளையும் தமிழக பாஜக முடுக்கி விட்டுள்ளது. முதல் கட்டமாக தஞ்சாவூர், திருச்சி, கோவை, திருப்பத்தூர், ராமநாதபுரம், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நயினார் நாகேந்திரன் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். 2-ம் கட்ட சுற்றுப் பயணம் நவ. 24-ம்தேதி தேனியில் தொடங்குகிறது. சுற்றுப் பயணத்தின்போது, திமுக அரசின் தவறுகளை மக்களிடையே எடுத்துச் சொல்லி மக்களின் ஆதரவை திரட்ட முடிவு முடிவு செய்யப்பட்டுள்ளதாக கட்சி நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர்.





