இனிமேலும் அவமானங்களை சந்திக்க விரும்பவில்லை என்று பாடகர் கே.ஜே.யேசுதாஸின் மகனும், பாடகருமான விஜய் யேசுதாஸ் தெரிவித்தார்.

பிரபல கர்நாடக இசைப் பாடகர் கே.ஜே.யேசுதாசின் மகன் விஜய் யேசுதாஸ். கடந்த 2000-ஆம் ஆண்டில் மலையாள சினிமாவில் பாடத் தொடங்கினார். தமிழ், தெலுங்கு, கன்னடம் இந்தி உள்பட பல மொழிகளில் 300-க்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியிருக்கிறார். தமிழில் தனுஷ் நடித்த மாரி படத்தில் வில்லன் வேடம் ஏற்று நடித்தார். பின்னர் படை வீரன் என்ற படத்தில் ஹீரோவாகவும் நடித்தார். இந்நிலையில், மலையாளப் படங்களில் இனி பாடப் போவதில்லை என்று அறிவித்தார்.
இதுகுறித்து விஜய் யேசுதாஸ் கூறும்போது, “மலையாள திரையுலகில் இசை அமைப்பாளர்களுக்கும் மற்றும் பின்னணி பாடகர்களுக்கும் உரிய மரியாதை கிடைப்பதில்லை. ஆனால் தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் அப்படி கிடையாது. அங்கு பின்னணி பாடகர் மற்றும் பாடகிகளுக்கு நல்ல மரியாதை அளித்து வரவேற்கின்றனர். மலையாளப் படவுலகில் பலமுறை நான் பல்வேறு அவமானங்களை சந்தித்துள்ளேன். இனிமேலும் நான் அவமானங்களை சந்திக்க விரும்பவில்லை. எனவே, இனி மலையாளப் படங்களில் பாடப் போவதில்லை. இது உறுதி” என்றார்.




