மருத்துவ கல்வியில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு மசோதாவிற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று ஒப்புதல் வழங்கியுள்ளார்.
நீட் தேர்வு அமல்படுத்தப்பட்ட பிறகு தமிழகத்தில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் இடம் கிடைப்பது மிகவும் கடினமானதாக மாறிவிட்டது. நீட் தேர்வு காரணமாக, இதுவரை தமிழகத்தில் 13 மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இதையடுத்து, தமிழக சட்டசபையில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி தமிழக சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவிற்கு ஒப்புதல் வழங்க வலியுறுத்தி, தமிழக ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆனால், கடந்த செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதி அனுப்பப்பட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமலே இருந்து வந்தார். தமிழக அரசு மற்றும் அனைத்து அரசியல் கட்சியினரும் வலியுறுத்தியும் ஆளுநர் ஒப்புதல் அளிக்காமலே தாமதம் செய்தார்.
இதையடுத்து, ஆளுநர் ஒப்புதல் அளித்தால் மட்டுமே தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு தொடங்கப்படும் என்று தமிழக அரசு திட்டவட்டமாக அறிவித்தது. அரசுப்பள்ளி மாணவர்களின் மருத்துவ கல்வி கேள்விக்குறியான நிலையில், தமிழக அரசு நேற்று ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் 7.5 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவிற்கான அரசாணையை வெளியிட்டது.
ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் வெளியிடப்பட்ட இந்த அரசாணை செல்லுமா என்று குழப்பத்துடன் இருந்த நிலையில், தமிழக அரசின் 7.5 சதவீத சட்டமசோதாவிற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று ஒப்புதல் அளித்தார்.
இந்த மசோதா குறித்து கருத்து கேட்க, கடந்த செப்டம்பர் 26-ஆம் தேதி, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவுக்கு, ஆளுநரின் செயலாளர் ஆனந்த்ராவ் பாட்டீல் கடிதம் எழுதியிருந்தார். இந்தக் கடிதத்திற்கு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, நேற்று பதில் கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தில், 7.5% உள் இடஒதுக்கீடு மசோதா, அரசியலமைப்புச் சட்டத்திற்கு இணங்க உள்ளதாக துஷார் மேத்தா தெரிவித்திருக்கிறார்.
இதையடுத்து, துஷார் மேத்தாவின் கருத்து ஆளுநருக்குக் கிடைத்த நிலையில், இந்த மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.