நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர் பாலு வர்கீஸ். அவருடைய அப்பா குரு சோமசுந்தரமும் அம்மா ஊர்வசியும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கிறார்கள். பாலு வர்கீஸ் தனியார் காபி ஷாப்பில் வேலை செய்கிறார். மாலைக்கண் பிரச்சினை உள்ள அவருக்கு திடீரென பார்க்கும் வேலை பறிபோகிறது. இதனால் சொந்தமாக பிசினஸ் தொடங்க ஆசைப்படுகிறார். அத்துடன் தன் கண் பார்வைக்கு வெளிநாட்டில் சிகிச்சை தரப்படுகிறது என்பதையும் தெரிந்து கொள்கிறார். ஆனால் பணம் இல்லாமல் போனதால் அவர் தவிக்கிறார். இந்த சூழ்நிலையில் அவருடைய வீட்டில் புராதான காலத்தைச் சேர்ந்த விநாயகர் சிலை இருப்பதை அறிந்து கொள்ளும் சிலை திருட்டு கும்பல் பாலுவுக்கு பணத்தாசை காட்டி சிலைக்கு விலை பேச முயற்சி செய்கிறது. தன்னுடைய காலனியில் நடக்க இருக்கும் திருவிழா, கண்காணிப்பு கேமரா போன்ற தடைகளால் சிலையை கடத்த முடியாமல் தவிக்கிறார் பாலு, துணைக்கு தன் நண்பன் கலையரசனை அழைக்கிறார். நண்பர்களால் அந்த சிலையை கடத்த முடிந்ததா, பாலுவின் லட்சியம் நிறைவேறியதா என்பதுதான் மீதி கதை. அம்மாவின் செல்லப்பிள்ளை வேடத்துக்கு கச்சிதமாக பொருந்துகிறார் பாலு வர்கீஸ். தனக்கு இருக்கும் பிரச்சினை காரணமாக வெளிப்படுத்தும் குழந்தைத்தனமான நடிப்பு, அம்மா மீது காண்பிக்கும் அழுத்தமான பாசம் என தன்னுடைய பங்கை நிறைவாக நடித்து கொடுத்துள்ளார். மேலும் இந்த காட்சிகள் மெதுவாக நகர்வது படத்தின் பலகீனம். சுப்பிரமணியன் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் மனதை சிலிர்க்க வைக்கும் அதிர்வுகளை அடிக்கடி நமக்கு தருகிறது. ஸ்வரூப் பிலிப்பின் ஒளிப்பதிவு பலம். மென்மையான கதை கருவில் ஆன்மீகத்தை கலந்து ரசிக்கும்படி கொடுத்துள்ளார் இயக்குனர் சுபாஷ் லலிதா சுப்பிரமணியன்.