அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று விடுவதாக கொலை மிரட்டல் கடிதம் ஒன்று வந்துள்ளது. இதுக்குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அண்ணா பல்கலைக்கழத்தின் துணைவேந்தர் சூரப்பாவிற்கு, வீரப்பன் என்ற பெயரில் கொலை மிரட்டல் கடிதம் ஒன்று வந்துள்ளது. அதில், அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தை திரும்பப் பெற வேண்டும் என்றும், இல்லையென்றால் துப்பாக்கியால் சுட்டுக்கொன்று விடுவதாகவும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இந்தக் கடிதம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள சென்னை கோட்டூர்புரம் போலீசார், கடிதத்தைக் கைபற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்று, தமிழக அரசின் நிலைப்பாட்டினை அறியாமலேயே சூரப்பா மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படித்தியது. இதற்கு ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் மற்றும் கல்வியாளர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இதன் காரணமாக சூரப்பாவை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழும்பின. மேலும், அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து வேண்டாம் என, மத்திய அரசுக்கு தமிழக அரசு சார்பில் கடிதம் ஒன்று எழுதி அனுப்பப்பட்டது. இந்நிலையில் வந்துள்ள கொலை மிரட்டல் கடிதம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.