சென்னையில் தனியார் வங்கியில் வேலை வாங்கி தருவதாக கூறி 23 லட்சம் ரூபாய் மோசடி செய்துவிட்டு தலைமறைவான நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சென்னையில் தற்போது கொலை கொள்ளை என இடைவிடாமல் நடந்து வருகின்றது. ஏமாற்றும் கூட்டமும், ஏமாறும் கூட்டமும் பெருகிக்கொண்டே வருகிறது. இந்நிலையில் வங்கியில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி நடைபெற்றுள்ளது. சென்னை வேப்பேரியை சேர்ந்தவர் ஜெனிபர் ஆரோக்கியமேரி.
இவர் இணையத்தின் மூலமாக பொதுமக்களுக்கு ஆதார் கார்டு, பேன் கார்டு போன்ற அரசு சம்மந்தப்பட்ட கார்டுகள் பெற்று தரும் வேலை பார்க்கிறார். இவருக்கு கடந்த 2017 ஆண்டு ராஜ்பரத் என்பவற்றின் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர் வங்கியில் உயரதிகாரிகள் பலர் தமக்கு தெரியும் என்றும், அவர்கள் மூலம் எளிதாக வேலை வாங்கிவிடலாம் என்றும் ஆசைவார்த்தை கூறியுள்ளார்.
இந்த ஆசைக்கு இணங்கிய ஆரோக்கியமேரி தனது தோழிகள் பரிமளா, ரேவதி ஆகியோருடன் சேர்ந்து 23 லட்சம் ரூபாயை ராஜ் பரத்திடம் கொடுத்துள்ளார். பல நாட்கள் கழித்தும் ராஜ் பரத் வேலை வாங்கி கொடுக்காததால் மேரியும் அவருடைய தோழிகளும் மனஉளைச்சலுக்கு ஆளாகி தன் பணத்தையாவது திரும்ப தரும்படி கேட்டுள்ளனர்.
அதற்கு சரியான பதில் அளிக்காத ராஜ்பரத் தன் தந்தையுடன் சேர்ந்து அவர்களை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட நபர்கள் அளித்த புகாரின் பேரில் வேப்பேரி போலீசார் ராஜ்பரத்தின் தந்தை கோபாலகிருஷ்ணனை கைது செய்தனர். மேலும் தலைமறைவான ராஜ்பரத்தை போலீசார் தேடிவருகின்றனர்.