
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவ மழை பெய்தது குறிப்பாக தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகின்றது. மேகமலை, வெள்ளிமலை பகுதிகளில் பெய்த மழையால் மூலவைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது. நேற்று முன்தினம் இரவிலும் மேகமலை, வெள்ளிமலை பகுதிகளில் பலத்த மழை பொழிந்தது. இந்த மழை விடிய, விடிய மழை கொட்டி தீர்த்தது நேற்றும் மழை தொடர்ந்தது.
இதனால், மூலவைகை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. கண்டமனூர் ஆற்றுப்பாலத்தை ஒட்டியபடி தண்ணீர் சென்றது. கடந்த 2011-ம் ஆண்டு வைகை ஆற்றில் ஏற்பட்ட பெரிய அளவிலான வெள்ளப்பெருக்குக்கு பிறகு, நேற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வினாடிக்கு 12 ஆயிரம் கன அடிக்கும் அதிகமான தண்ணீர் ஆற்றில் ஓடியது.
இதனால் ஆற்றங்கரையோர பகுதிகளில் நின்று வெள்ளத்தை மக்கள் வேடிக்கை பார்த்தனர். தேனி அருகே அம்மச்சியாபுரம்-அய்யனார்புரம் இடையே வைகை ஆற்றுப் பாலம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த பாலம் கட்டப்பட்ட பின்னர் ஆற்றில் முதல் முறையாக பிரமாண்ட அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், பாலத்தில் நின்று கொண்டு பலரும் வெள்ளத்தை வேடிக்கை பார்த்தனர்.

வைகை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக ஏராளமான ராட்சத மரங்கள் இழுத்து வரப்பட்டன. மேலும் குன்னூர் வைகை ஆற்றுப் பகுதியில் குடிநீர் திட்டங்களுக்காக அமைக்கப்பட்ட உறைகிணறுகளை மூழ்கடித்தபடி வெள்ளம் ஓடியது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாலும், வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாலும் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன்காரணமாக நீர்மட்டம் வேகமாக உயரத்தொடங்கியுள்ளது. 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 50 அடியாக இருந்தது. இந்தநிலையில் நீர்மட்டம் ஒரேநாளில் 3 அடி உயர்ந்து தற்போது 53 அடியாக உள்ளது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் வைகை அணை நீர்மட்டம் இன்னும் சில நாட்களில் நிரம்பும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




