தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்டங்களை தடை செய்யும் அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.
ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்டங்களில் பணம் வைத்து விளையாடி பலர் தங்கள் பணத்தை இழந்து அதனால் தற்கொலை செய்யும் சம்பவங்கள் தமிழகத்தில் அவ்வப்போது நடந்தேறி வருகிறது. இந்நிலையில், ரம்மி போன்ற சூதாட்டங்களை தடை செய்யும் அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு அரசானை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது ஆன்லைன் ரம்மி போன்ற இணையவழி விளையாட்டுகளில் பணம் வைத்து விளையாடுவதன் மூலம் பொதுமக்கள் குறிப்பாக இளைஞர்கள் தங்களது பணத்தையும் வாழ்க்கையையும் தொலைத்து விடும் அவலத்தை தடுக்கும் விதமாக இந்த ஒரு அவசர சட்டத்தை இயற்ற உள்ளது. இச்சட்டத்திட்டத்தை இயற்றுவதன் மூலம் இதுபோன்ற ஆன்லைன் விளையாட்டுகளில் பணம் வைத்து ஈடுபடுவதையும் அதில் ஈடுபடுத்தப்படும் கணினிகள் மற்றும் அது தொடர்பான உபகரணங்களை தடை செய்ய முடியும். அத்துடன் இத்தகைய விளையாட்டை விளையாடுபவர்களுக்கு ரூபாய் 5 ஆயிரம் அபராதமும் ஆறு மாத சிறை தண்டனையும் வழங்க முடியும். ஆன்லைன் ரம்மி விளையாட்டு அரங்கம் வைத்திருப்போருக்கு ரூபாய் 10 ஆயிரம் அபராதமும் இரண்டு வரை சிறை தண்டனையும் வழங்கும் இவ்விளையாட்டில் பண பரிமாற்றங்களை இணையவழி மூலம் மேற்கொள்வது தடுக்கவும் இவ்விளையாட்டை நடத்தும் நிறுவனங்களின் பொறுப்பாளர்களின் மீது நடவடிக்கை எடுக்கவும் தண்டிக்கவும் இந்த அவசர சட்டம் வழிவகுக்கும். இவ்வகை சட்டத்துக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.