டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் 4-ந் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று இடதுசாரிகள் அறிவித்துள்ளனர். மார்க்சிஸ்டு மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், இந்தியக் கம்யூனிஸ்டு மாநிலச் செயலாளர் முத்தரசன், சி.பி.ஐ. (எம்.எல்) என்.கே.நடராஜன் ஆகியோர் கூட்டறிக்கையில் இன்று வெளியிட்ட கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது:
டெல்லி போராட்டம்
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை நிபந்தனையின்றி ரத்து செய்யக் கோரி விவசாயிகளின் நாடு தழுவிய போராட்டம் நடைபெற்று வருகிறது. லட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.
தொடர் போராட்டம்
மோடி அரசு விவசாயிகள் மீது கொடூரமான அடக்குமுறை நடவடிக்கைகளைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளது. விவசாயிகளின் பேரெழுச்சி மிக்க போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழகத்தில் வரும் 4-ம் தேதி முதல் மத்திய, மாநில அரசு அலுவலகங்களுக்கு முன்பு தொடர்ச்சியான மறியல் போராட்டம் நடத்துவது என சி.பி.ஐ. (எம்), சி.பி.ஐ., சி.பி.ஐ. (எம்-எல்) லிபரேசன் ஆகிய இடதுசாரிக் கட்சிகள் தீர்மானித்துள்ளன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.