மக்கள் நீதி மய்யம் ஆட்சியில் இல்லத்தரசிகளுக்கு ஊதியம் வழங்கப்படும் என்ற முக்கியமான வாக்குறுதியை கமல்ஹாசன் அளித்துள்ளார்.
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சீரமைப்போம் தமிழகத்தை என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். முதற்கட்ட பிரச்சாரத்தை தென்மாவட்டங்களில் முடித்த அவர், இரண்டாவது கட்ட பிரச்சாரத்தை சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மேற்கொண்டு வருகிறார்.
தனது பிரச்சாரத்தை முக்கியமான வாக்குறுதிகளை அளிக்கிறார். மதுரையை இரண்டாம் தலைநகராக்குவேன் என்ற கமல்ஹாசன், மீனவர் ஒருவர் தனது சட்டமன்றத்தில் இருப்பார் எனவும் கூறியுள்ளார்.
இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால் செயல்படுத்தப்படும் 7 முக்கியமான சிறப்பம்சங்களை காஞ்சிபுரத்தில் இன்று அறிவித்த கமல்ஹாசன், தமிழகத்தின் பொருளியலைச் சீரமைத்து டிரில்லியன் பொருளாதாரம் எனும் இலக்கை நோக்கிய செயல்திட்டத்திற்கு கொண்டு செல்லும் விதத்தில் இவை இருக்கும் எனவும் உறுதியளித்தார்.
கிராம நிர்வாக அலுவலகம் முதல் முதல்வர் அலுவலகம் வரை காகிதமில்லா அலுவலகமாக மாற்றுவோம். மக்கள் தங்களுக்கு தேவையான அனைத்து ஆவணங்கள், அனுமதிகள், ஆணைகளை செல்போனில் கிடைத்திடும் வகையில் மாற்றுவோம் தமிழகத்திலுள்ள அனைத்து வீடுகளுக்கும் இணைய வசதி செய்து கொடுக்கப்படும். தொழில் முனைவோர், தொழில் நிறுவனங்களை கிராமங்களிலும் கிளை அமைக்கச் சொல்வோம் என்றார் கமல்ஹாசன்.
read more: கூட்டணி வேறு, கொள்கை வேறு: எடப்பாடி பழனிசாமி எதற்காக சொல்கிறார்?
“பெண்கள் கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் முனையும் ஆற்றல் என அனைத்து வகையிலும் முன்னேறிட எங்கள் அரசு செயல்திட்டம் வகுக்கும். இல்லத்தரசிகளுக்கு அவர்களின் உழைப்பு அங்கீகரிக்கப்படும் வகையில் செய்யும் வேலைக்கு சரியான ஊதியம் வழங்கப்படும்” என்று அறிவித்த கமல்ஹாசன். விவசாயத்தை வருமானமும், லாபமும் உள்ள வணிகமாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார்.
இறுதியாக “வறுமைக்கோடு என்ற பழைய அளவீடு மாற்றப்படு செழுமைக் கோடு என்ற புதிய அளவீடு அமையப்பெறும். வறுமைக் கோட்டீற்கு கீழே இருக்கும் மக்களை, செழுமைக் கோட்டுக்கு கொண்டு வரும் முதல் அரசாக நாங்கள் இருப்போம்” என்றும் நம்பிக்கை கூறியுள்ளார் கமல்.