ஸ்டாலினால் ஒருபோதும் முதல்வராக வர முடியாது என முன்னாள் மத்திய அமைச்சரும், அவரது சகோதரருமான மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சரும், திமுகவில் தென்மண்டல அமைப்புச் செயலாளராக இருந்தவருமான மு.க.அழகிரி, கடந்த 2014ஆம் ஆண்டு கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவுக்குப் பிறகு திமுகவில் இணைய அவர் எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. வரும் சட்டமன்றத் தேர்தலில் தனது பங்களிப்பு இருக்கும் என அழகிரி அறிவித்தார்.
இந்த நிலையில் அடுத்தகட்ட நகர்வு தொடர்பாக தனது ஆதரவாளர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தை அழகிரி இன்று மதுரை பாண்டி கோயிலில் உள்ள துவாரகா மண்டபத்தில் நடத்தினார். ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய அழகிரி, “சதிகாரர்கள், துரோகிகளை எதிர்ப்பதற்கான முதல் படிக்கட்டு இந்தக் கூட்டம். திமுகவில் தொண்டனாக இருக்கவே விரும்பினேன். பதவியை எதிர்பார்த்து என்றுமே திமுகவில் நான் இருந்ததில்லை. தென் மண்டல அமைப்புச் செயலாளர் பதவியை கருணாநிதி வலியுறுத்தி கொடுத்ததால் ஏற்றுக் கொண்டேன்.
மத்திய அமைச்சர் பதவி தேவையில்லை என்றேன், வலுக்கட்டாயமாக கருணாநிதி எனக்குக் கொடுத்தார். எம்.ஜி.ஆரின் கோட்டையாக இருந்த மதுரையை திமுகவின் கோட்டையாக மாற்றியது நான்தான். இப்போதும் நான் உங்களில் ஒருவன் தான். மதுரை நமது கோட்டை, இதை யாராலும் மாற்ற முடியாது” என்று தெரிவித்தார்.
ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவியை என்னிடம் கேட்டுத்தான் கருணாநிதி அளித்தார். அவருக்கு பொருளாளர் பதவி வாங்கித் தந்ததே நான் தான். கருணாநிதியிடம் போனில் பேசி பெற்றுத் தந்தேன். கருணாநிதியிடம் என்னை பற்றி பொய்களை கூறி கட்சியைவிட்டு நீக்கினர். பேராசிரியர் அன்பழகனுக்குத் தெரியாமலேயே நான் நீக்கப்பட்டேன்.
கருணாநிதிக்கு பிறகு எல்லாம் நீதான். உனக்காக நான் எப்போதும் பாடுபடுவேன் என ஸ்டாலினிடம் தெரிவித்திருந்தேன் என்ற அழகிரி, அவர் ஏன் எனக்கு துரோகம் செய்தார் எனத் தெரியவில்லை. பொதுக்குழுவை வருக என என்னை வரவேற்று ஒரு நிர்வாகி போஸ்டர் ஒட்டினர். இது தவறா? மு.க.ஸ்டாலினுக்கு கூட வருங்கால முதல்வரே.. வருக என போஸ்டர் ஒட்டி உள்ளனர் என்று சுட்டிக்காட்டினார். ஸ்டாலின் ஒருபோதும் முதல்வராக முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.
read more: மழைக்கு ஒதுங்கிய தேமுதிகவினர்: கைது செய்த காவல் துறை!
எத்தனையோ பேரை அமைச்சராக்கியுள்ளேன். ஆனால் ஒருவருக்கு கூட நன்றி இல்லை நிச்சயம் நல்ல முடிவு எடுப்பேன், அது எதுவாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும்; எதையும் சந்திக்க தயாராக இருக்க வேண்டும் என ஆதரவாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார் அழகிரி.




