டெல்லி நோக்கி பேரணியில் ஈடுபட்ட ஹரியானாவை சேர்ந்த விவசாயிகள் மீது கண்ணீர் புகைக்குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா :
நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் கடந்த 40 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும், ஹரியானாவை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் டெல்லியில் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்பதற்காக கடந்த சில நாட்களாகவே டெல்லி-ஜெய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் திரண்டது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில், ஹரியானாவை சேர்ந்த விவசாயிகள் நேற்று திடீரென டெல்லி நோக்கி படையெடுத்தனர். காவல்துறையினர் அவர்களை ரிவாரி மாவட்டத்தின் மசானி என்னும் பகுதியில் தடுப்பு வேலி வைத்து தடுக்க முயற்சி செய்தனர். அதையும் மீறி அவர்கள் முன்னேற முயன்றதால் காவல் துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி அவர்களை கலைத்தனர்.இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
Read more – தமிழக அமைச்சர்களின் 2 வது ஊழல் பட்டியல் தயார், விரைவில் ஆளுநரிடம் சேர்ப்போம் : மு.க. ஸ்டாலின்
ஏற்கனவே மத்திய அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் விவசாயிகளின் சார்பில் 4 அம்ச கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டு அதில் 2 அம்ச கோரிக்கைகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.இன்று(ஜனவரி 4 ) மீண்டும் விவசாய அமைப்பினருடன் மத்திய அரசு 7 ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளது.




