ஜனவரி 29ஆம் தேதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை ஆரம்பிக்க நாடாளுமன்ற விவகாரத் துறை பரிந்துரைத்துள்ளது.

செப்டம்பர் மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரின்போது 25க்கும் மேற்பட்ட எம்.பி.க்களுக்கும், நாடாளுமன்றப் பணியாளர்களுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால், கூட்டத் தொடர் முன்கூட்டியே முடித்துக்கொள்ளப்பட்டது.
கொரோனா பரவல் டெல்லியில் குறையாத நிலையில், குளிர்காலக் கூட்டத் தொடரை மத்திய அரசு ரத்து செய்தது. குளிர்காலக் கூட்டத் தொடரை வரும் பட்ஜெட் கூட்டத் தொடரோடு சேர்த்து நடத்திக் கொள்ளலாம் என எம்.பி.க்களுக்கு கடிதம் மூலம் தெரிவித்தது. ஆனால், வேளாண் சட்டங்கள் குறித்த விவாதத்தை தவிர்க்கவே குளிர்காலக் கூட்டத் தொடரை நடத்தவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி, உடனடியாக அவையைக் கூட்ட வேண்டுமென வலியுறுத்தியது.
இந்த நிலையில் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை நேற்று ஆலோசனை நடத்தியது. அதன் முடிவில் பட்ஜெட் கூட்டத் தொடரை வரும் 29ஆம் தேதி கூட்டலாம் எனவும், ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடத்தலாம் எனவும் பரிந்துரை செய்தது.
அதன்படி, முதல்கட்டக் கூட்டத் தொடர் ஜனவரி 29ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 15ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது. கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு மார்ச் 8ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ஆம் தேதி முடிகிறது. பிப்ரவரி 1ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்கிறார். ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் நாடாளுமன்றக் கூட்டுக்குழு கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார்.
read more: அமித் ஷாவே வந்தாலும் முடியாது: கே.என்.நேரு சவால்
வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அதனை முன்னிறுத்தி விவாதங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் காத்திருக்கின்றன. அதுபோலவே கொரோனா வைரஸ் நடவடிக்கைகள், பிஎம்கேர் நிதி உள்ளிட்ட விவகாரங்களையும் எழுப்ப எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன.




