சென்னையில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது பெட்ரோல் விலை. டீசல் லிட்டர் 80 ரூபாயை கடந்தது.

சென்னையில் கடந்த 2018 அக்டோபரில் பெட்ரோல் லிட்டர் ரூபாய் 87.33க்கு விற்பனையானதே அதிகபட்ச விலையாக பதிவான நிலையில், இரண்டு ஆண்டுகளுக்குப் பின்பு இன்று அதிகபட்ச விலையாக பெட்ரோல் லிட்டருக்கு 87.40 பைசாவிற்கு விற்பனையாகிறது. அதேவேளையில் டீசல் லிட்டர் ரூ.80.19 பைசாவிற்கு விற்பனையாகிறது. கொரோனா வைரஸ் பரவுவல் மற்றும் அதன் தொடர்ச்சியான ஊரடங்கு ஆகியவற்றால் வேலைவாய்ப்பு குறைந்து பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தினமும் உயர்ந்துவரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நடுத்தர மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஜனவரி 7ம் தேதி முதல் தொடர்ந்து 5 நாட்கள் விலையில் மாற்றம் இன்றி பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.96 க்கு விற்பனையானது. 12ம் தேதி 0.07 பைசா விலையும், நேற்று 25 பைசாவும், இன்று 12 பைசாவும் விலை அதிகரித்து லிட்டர் ரூ.87.40க்கு விற்பனையாகிறது. அதைப்போல் ஜனவரி 7ம் தேதி முதல் 5நாட்களுக்கு எந்த வித மாற்றமும் இன்றி டீசல் லிட்டருக்கு ரூ.79.72 பைசாவிற்கு டீசல் விற்பனையானது. கடந்த 12ம் தேதி 0.06 பைசாவும், நேற்று 26 பைசாவும் இன்று 15 பைசாவும் விலை அதிகரித்து ரூ.80.19க்கு ஒரு லிட்டர் டீசல் விற்பனையாகிறது.

தினசரி உயர்ந்து வரும் பெட்ரோல் விலை பொதுமக்களை பெரிதும் பாதிப்பதாகவும், நடுத்தர மற்றும் தினக்கூலி வேலைக்கு செல்லும் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக வேதனைப்படுகின்றனர். அதைப்போல் டீசல் விலையில் ஏற்பட்டுவரும் உயர்வினால், அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்து மக்களை சிரமப்படுத்துவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். கடந்த ஆண்டு மே மாதம் முதல் இதுவரையிலான 8 மாதத்தில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.15.24, டீசல் ரூ.12.30லிட்டருக்கு விலை அதிகரித்துள்ளது.




