அமைச்சர் நமச்சிவாயம், ஊசுடு தொகுதி காங் எம்.எல்.ஏ தீப்பாந்தயன் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தனர்.
புதுச்சேரியில் பொதுப்பணித்துறை, கலால்துறை உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை வகித்தவர் நமச்சிவாயம். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நமச்சிவாயத்துக்கு அக்கட்சியில் சரியான இடம் கொடுக்கவில்லை என்ற அதிருப்தி இருந்து வருகிறது. இந்த நிலையில் அவருடன் பா.ஜ.க பேச்சு வார்த்தை நடத்தி கட்சியில் சேர சொல்லி இருக்கிறது. அதன்படி நமச்சிவாயமும் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யப் போவதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் அடிப்படை பொறுப்பில் இருந்து நமச்சிவாயம் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் நமச்சிவாயம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமிக்கு அடுத்தபடியாக 2-ஆவது இடம் வகிப்பவர் நமச்சிவாயம். மேலும், புதுச்சேரி காங்கிரஸ் தலைவராகவும் தொடா்ந்து பதவி வகித்து வந்தார். பொதுப் பணி, கலால் துறை உள்பட 19 துறைகள் நமச்சிவாயத்திடம் உள்ளன. மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியில் ஒருவருக்கு ஒரு பதவி என்ற அடிப்படையில், நமச்சிவாயத்திடமிருந்த மாநில காங்கிரஸ் தலைவா் பதவி பறிக்கப்பட்டு, காரைக்காலைச் சோந்த முன்னாள் அமைச்சா் ஏ.வி.சுப்பிரமணியனிடம் வழங்கப்பட்டது. இதனால் நமச்சிவாயம் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.