டெல்லியில் இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டு வெடித்தது தொடர்பான வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரிக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஜனவரி 29ந்தேதி மாலை டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே குறைந்த சக்திகொண்ட வெடிகுண்டு ஒன்று வெடித்தது. இதில் ஒருவர் காயமடைந்தார், 4 கார்கள் சேதமடைந்தன. இதையடுத்து அப்பகுதியில் உள்ள சாலைகள் மூடப்பட்டன. சி.சி.டி.வி. காட்சிகள் ஆராயப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. சம்பவம் நடந்த இடத்தில் இஸ்ரேல் தூதரக அதிகாரிக்கான கடிதம் ஒன்றும கைப்பற்றப்பட்டது. மேலும் சிறிது எரிந்த நிலையில் கைக்குட்டை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அசம்பாவிதங்களை தவிர்க்க அனைத்து விமான நிலையங்கள், அரசு கட்டிடங்கள், ரெயில் நிலையங்கள் மற்றும் பஸ் நிலையங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பின்னர் முக்கிய நகரங்கள் எச்சரிக்கப்பட்டன.
குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்திற்கு மிக அருகில் தான் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட வி.வி.ஐ.பி.க்கள் ப நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருந்தனர். டெல்லி போலீசின் சிறப்பு படை பிரிவு இந்த குண்டுவெடிப்பு பற்றி விசாரணை நடத்தியது. இது பயங்காரவாதிகளின் சதியாக இருக்கும் என்று இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ரான் மல்கா கூறியிருந்தார். இஸ்ரேலிய தூதரகம் மீது குறி வைத்து நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் என்பது எங்களுடைய உறுதியான கணிப்பு என்றும் அவர் தெரிவித்தார். குடியரசு தின கொண்டாட்டங்கள் நிறைவடைந்து ஒரு வாரத்திற்குள் டெல்லியில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், இந்த வழக்கை மத்திய உள்விவகார அமைச்சகம் தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றியுள்ளதாக தகவல்கள் வெளி வந்துள்ளன.