ரஷ்ய விமானத்தில் உள்ளாடையை கழட்ட முயன்ற பெண்ணை விமான ஊழியர்கள் இருக்கையுடன் கட்டிவைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
விளாடிவோஸ்டோக் என்ற பகுதியில் இருந்து விமானம் புறப்பட்ட 15 நிமிடங்களுக்குள், அந்தப் பெண் தனது இருக்கையிலிருந்து எழுந்து கேபினை சுற்றி நடக்க ஆரம்பித்ததாக செய்தி வெளியிட்டுள்ளது. அதன்பிறகு, அந்தப் பெண் தன் ஆடைகளை கழற்றி மீண்டும் போட ஆரம்பித்திருக்கிறார். கேபின் குழு அதிகாரிகளின் தொடர்ச்சியான உத்தரவுகளையும் அந்தப் பெண் புறக்கணித்ததால் அவர் மனதளவில் நிலையாக இல்லை என்பது தெரியவந்தது.
விமான அதிகாரிகள் பல்வேறு கோரிக்கைகளை வைத்தபோதிலும் பெண்ணின் அட்டகாசம் தொடர்ந்ததால் வேறுவழியின்றி, விமான பணிப்பெண்களும் மற்றும் சில பயணிகளும் இணைந்து அந்த பெண் பயணியை கட்டிவைக்க முடிவு செய்தனர். ஊழியர்களின் சொந்த பாதுகாப்பு மற்றும் பிற பயணிகளுக்கு எந்த வித தீங்கும் ஏற்படாமல் இருக்க அந்த பெண்ணை அவரது இருக்கையில் அமரவைத்து கயிறு, சீட்பெல்ட் மற்றும் ஒட்டும் டேப் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி கட்டிவைத்தனர். இதையடுத்து, விமானம் சைபீரியாவின் நோவோசிபிர்ஸ்கில் உள்ள டோல்மாசெவோ விமான நிலையத்திற்குச் சென்றது. அங்கு விமானம் பாதுகாப்பாக அதன் இலக்கை அடைந்தவுடன் அந்தப்பெண் விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பாக டெய்லி மெயில் பகிர்ந்த வீடியோவில், அந்தப் பெண் தனது ஒழுங்கற்ற நடத்தைக்குப் பிறகு இருக்கையில் கட்டப்பட்டிருப்பதைக் காணலாம். மேலும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட பின்னர், அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில், விளாடிவோஸ்டோக்கில் விமானத்தில் ஏறுவதற்கு முன்பு ஒரு செயற்கை மருந்து உட்கொண்டதாக அந்தப் பெண் ஒப்புக்கொண்டார். இதையடுத்து, அந்தப் பெண் எவ்வளவு போதையில் இருந்தார் என்பதைக் கண்டறிய மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக ரஷ்யாவின் உள்துறை அமைச்சகம் பகிர்ந்து கொண்டது. மேலும் அவர் பயணத்தின்போது எடுத்துச்சென்ற ஹாண்ட்பேக்குகளில் என்னென்ன வைத்திருந்தார் என்பதும் காவல்துறை அதிகாரிகளால் சோதனை செய்யப்பட்டது. விமான பயணத்தின்போது போதை மருந்தினை எடுத்துக்கொண்ட காரணத்திற்காக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, போலீசார் கஸ்டடியில் வைக்கப்பட்டுள்ளதாகவும் உள்துறை அமைச்சகம் தகவல் அளித்துள்ளது.