கணவன் கைவிட்ட மனைவிக்கு மாதம் ரூ.1 லட்சம் ஜீவனாம்சமாக தர வேண்டும் என மும்பை நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.
மும்பையில் 40 வயதான ஏரோனாட்டிக்கல் இன்ஜினீயர் தன்னிடமிருந்து பிரிந்துசென்ற நிலையில், தனக்கும் குழந்தைகளுக்கும் உதவி எதுவும் செய்வதில்லை என்று அவருடைய மனைவி மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிமன்றம் விசாரித்ததில், அந்த பெண்ணின் கணவர் மாதம் ரூ. 5.5 லட்சம் சம்பாதித்து வருவது தெரிய வந்திருக்கிறது. 2018ஆம் ஆண்டு அந்த பெண் கணவர் மற்றும் அவரது குடும்பத்தார்மீது வன்முறை வழக்கு தொடர்ந்திருந்ததும், 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் குழந்தைகள் மற்றும் மனைவிக்கு மாதந்தோறும் ஜீவனாம்சம் தரவேண்டும் என்று கூறி வழக்கை முடித்து வைத்திருந்ததும் தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து அந்த நபர் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அமர்வு நீதிமன்றத்தில் இதுகுறித்து வழக்குத் தொடர்ந்தபோது, நீதிமன்றத்தில் ஆஜராகாத குற்றத்திற்காக ரூ.2000த்தை அபராதமாக 15 நாட்களுக்குள் செலுத்தவேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. ஆனால் 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம், அந்த நபர் தான் வெளியூரில் வேலை செய்துவருவதால் தனது மனைவியிடம் ரூ.2000 பணத்தை செலுத்திவிடுவதாகவும் கூறியிருக்கிறார்.
தனது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு ரூ. 2 லட்சம் மட்டுமே கொடுத்திருக்கிறார். அதன்பிறகு பணம் எதுவும் கொடுக்காததால்தான் அந்த பெண் மீண்டும் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மாதந்தோறும் ஜீவனாம்சமாக ரூ.1 லட்சம் தனது மனைவி மற்றும் குழந்தைகளுக்குக்கு கொடுக்கவேண்டும் என உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கியுள்ளனர்.