நடுவானில் பறந்துகொண்டிருந்த விமானத்தில் பிறந்த பெண் குழந்தை நெகிழ்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பெங்களுருவில் இருந்து இன்று அதிகாலை ஜெய்ப்பூருக்கு சென்று கொண்டிருந்த போது தங்கள் பயணி ஒருவருக்கு பிரசவம் நடந்ததாகவும், அதில் பெண் குழந்தை பிறந்துள்ளதாகவும் இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
கர்நாடகாவின் தலைநகர் பெங்களூருவில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு இன்று அதிகாலை 5.45 மணிக்கு 6E 460 என்ற விமானம் புறப்பட்டு சென்றது. இந்த விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்த போது அதில் பயணித்த பெண் ஒருவர் பிரசவ வலியால் துடித்து, கேபின் குழு ஊழியர்களிடம் உதவி கோரினார். அதே நேரத்தில் அந்த விமானத்தில் பயணித்த மருத்துவர் சுபகானா நசீர் அப்பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க முன்வந்தார். கேபின் சுபகானா நசீர் அப்பெண்ணுக்கு பிரசவம் பார்த்துள்ளார். அப்பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
உடனடியாக ஜெய்ப்பூர் விமான நிலையத்திற்கு தகவல் அளித்த விமானி, மருத்துவ குழுவுடன், ஆம்புலன்ஸை தயாராக வருமாறு கூறியுள்ளார். இந்த விமானம் பிறந்த குழந்தையுடன் காலை 8 மணிக்கு ஜெய்ப்பூரை வந்தடைந்தது. தக்க நேரத்தில் உதவி செய்த மருத்துவர் சுபகானா நசீருக்கு இண்டிகோ நிறுவனத்தார் ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் பாராட்டு தெரிவித்தனர். இதனிடையே இந்த நிகழ்வு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள இண்டிகோ நிறுவனம், 6E 460 விமானத்தில் டிக்கெட் இல்லா பயணியும், அவரின் தாயும் நலமுடன் இருப்பதாக நகைச்சுவையாக தெரிவித்தனர்.