அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பிரச்சாரத்தின்போது ஓட்டுக்கேட்டு கோழிக்கறி வெட்டி அசத்தினார்.
திருச்சி :
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற 2 நாட்களே உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் வெற்றி பெரும் முனைப்பில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை மாலையுடன் பிரச்சாரம் முடிய இருப்பதால் அனைத்து கட்சிகளும் முண்டியடித்து கொண்டு ஓட்டு கேட்டு வருகின்றனர்.
ஏற்கனவே, பொதுமக்களை கவர பல்வேறு வேட்பாளர்கள் துணி துவைத்து, தோசை ஊற்றி கொடுத்து, டீ போட்டு கொடுத்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். இதையடுத்து, கே.கே.நகர், ஜே.கே.நகர் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட வெல்லமண்டி நடராஜன், அங்கிருந்த கறிக்கடையில் 2 கிலோ கோழிக்கறியை வெட்டிக் கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதனால் அதிமுக தொண்டர்கள் உற்சாகத்தில் கைதட்டி அவரை உற்சாகப்படுத்தினர்.