நடிகர் அக்ஷய் குமாரின் தாயார் அருணா பாட்டியா உடல் நல குறைவால் இன்று காலமானார்.
பாலிவுட் சூப்பர்ஸ்டார் அக்ஷய் குமாரின் தாயாரும், தயாரிப்பாளருமான அருணா பாட்டியா கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலம் பாதிப்பால் மும்பையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
இதனால், இங்கிலாந்தில் நடந்து வந்த சிண்ட்ரெல்லா படத்தின் படப்பிடிப்பில் இருந்த அக்ஷய் குமார், திங்கள்கிழமை காலை தனது தாயாராயை அருகில் இருந்து கவனித்துக் கொள்வதற்காக மும்பை திரும்பினார். இதனைத் தொடர்ந்து விரைவில் அருணா பாட்டியா குணமடைய ரசிகர்கள் பிரார்த்தனை செய்வதாக சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வந்தனர்.
இந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி அக்ஷய் குமார் தாயார் அருணா பாட்டியா காலமானார். இவரது மறைவுக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் உட்பட பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
இது குறித்து நடிகர் அக்ஷய் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் ”என் அம்மா ஸ்ரீமதி அருணா பாட்டியா இன்று காலை அமைதியாக இந்த உலகத்தை விட்டு வெளியேறி, என் தந்தையுடன் வேறு உலகில் இணைந்தார். இந்தக் காலக்கட்டத்தில் நானும் எனது குடும்பத்தினரும் உங்கள் பிரார்த்தனைகளை மிகவும் மதிக்கிறோம்” என வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.