சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கு இந்திய திரையுலகம் கௌரவம்… டெல்லியில் பிரமாண்ட விருது விழாவிற்கு ஏற்பாடு.
இந்திய சினிமாவின் உயரிய விருதாக மதிக்கப்படும் தாதா சாகேப் பால்கே விருது, இந்திய சினிமாவின் தந்தையாக போற்றப்படும் தாதா சாகேப் பால்கே பெயரில் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டு வருகிறது.
திரையுலகில் சாதனை நிகழ்த்தியவர்களுக்கு, வாழ்நாள் கௌரவமாக இந்த விருது வழங்கப்படுகிறது. அதேநேரம் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படுவதில் அரசியல் சார்பு இருப்பதாகவும் அவ்வப்போது விமர்சனங்கள் எழுவதும் உண்டு. இந்த விருதுக்கு பெயர்களை பரிந்துரை செய்வதில் மாநில அரசுகளுக்கும் பங்குண்டு. தமிழகத்தில் இயக்குநர் பாலசந்தர், நடிகர் சிவாஜி கணேசன் இருவருக்கு மட்டுமே இதுவரை தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த வரிசையில் 2019ஆம் ஆண்டுக்கான விருது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு அறிவிக்கப்பட்டது.
கொரோனா நோய் பரவல் காரணமாக விருது விழா நடத்தப்படாமல் இருந்தது. இந்த நிலையில் வருகிற அக்டோபர் 25ம் தேதி டெல்லியில் நடைபெறும் விழாவில் நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப்பால்கே விருது வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுகிறது. ரஜினியுடன், சிறந்த துணை நடிகருக்கான விருதை விஜய் சேதுபதியும், டி.இமான் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதையும், பார்த்திபன், ஒத்த செருப்பு சைஸ் 7 படத்துக்காக சிறந்த ஜூரி விருதையும், நாகவிஷால் சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருதையும் பெற உள்ளனர்.