பாஜக காங்கிரஸ் இரண்டு கட்சிகளும் கூட்டு சேர்ந்து செயல்படுகிறார்கள்; யாரேனும் ஒருவர் ஆட்சிக்கு வந்தால் மற்றொருவரை காப்பாற்றுகிறார்கள் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த கெஜ்ரிவால் கோவா-வில் பேட்டி.

டெல்லி, அடுத்த ஆண்டு கோவா மாநிலம் சட்டமன்றப் பொதுத்தேர்தலை சந்திக்க உள்ள நிலையில் பாஜக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்தி இருக்கிறார்கள். இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்றைய தினம் கோவா மாநிலம் பனாஜிக்கு சென்றார். அங்கு தேர்தல் பணிகள் தொடர்பாக ஒருசில ஆலோசனைகளை நடத்திய பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
பாஜக மற்றும் காங்கிரஸ் இந்த இரண்டு கட்சிகளுமே ஊழல்வாதிகள் நிறைந்த கட்சி என விமர்சித்த கெஜ்ரிவால் பாஜகவை எதிர்த்து பேசுவதற்கு காங்கிரஸ் காரர்களுக்கு தைரியம் இல்லை! காரணம் எதிர்த்து பேசினால் சிறை செல்வோம் என அவர்களுக்கே தெரிகிறது என்றார். கடந்த 10 ஆண்டுகளில் காங்கிரசை சேர்ந்த முதலமைச்சர்களோ அல்லது அமைச்சர்கள் மீது ஏன் ஒரு வழக்கு கூட பதிவு செய்யவில்லை என இப்போது புரிகிறதா என பேசினார். தொடர்ந்து பேசிய அவர், காங்கிரஸ் மற்றும் பாஜக இருவருமே கூட்டு சேர்ந்துதான் செயல்படுகிறார்கள். உதாரணமாக பாஜக ஆட்சிக்கு வரும்போது காங்கிரஸ் கட்சியினரை ஒன்றும் செய்வதில்லை! அதேபோல காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போது பாஜகவினரை ஒன்றும் செய்வதில்லை! இப்படியே அவர்களுடைய செயல்பாடுகள் உள்ளது என்றார்.
மேலும், கோவா மாநிலத்தில் ஆம் ஆத்மி அரசு அமைந்தால் கிறிஸ்துவர்களுக்கு வேளாங்கண்ணிக்கு செல்ல இலவச யாத்திரைக்கு ஏற்பாடும்,முஸ்லிம்களுக்கு அஜ்மீர் ஷெரீப் மற்றும் சாய்பாபாவை வணங்குபவர்களுக்கு சீரடி கோயில்களுக்குச் செல்ல இலவச பயணம் மேற்கொள்ள வழிவகை செய்யப்படும் என வாக்குறுதி அளித்தார்.
ஏற்கனவே, கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவா மாநிலத்திற்கு விஜயம் செய்தார் அரவிந்த் கெஜ்ரிவால் அம்மாநிலத்தில் ஆம் ஆத்மி அரசு அமைந்தால் 300 யூனிட் இலவச மின்சாரம் வீட்டுக்கு வழங்குவதாகவும் விவசாயிகளுக்கு முழுமையான இலவச மின்சாரம் வழங்குவதாகவும் வாக்குறுதி அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




