இந்திய ஆயில் கார்ப்பரேஷன் லிமிட் மூலம் அடுத்த 3 ஆண்டுகளில் நாடு முழுவதும் 10 ஆயிரம் சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்க திட்டம் என அதன் தலைவர் எஸ்.எம்.வைத்யா பேட்டி.
டெல்லி, பெட்ரோலிய பொருட்களுக்கான தட்டுப்பாடு மற்றும் சுற்றுச் சூழலுக்கு உகந்த வகையில் வாகனங்களை இயக்க வேண்டும் என்ற கோட்பாட்டின் அடிப்படையிலும், பாரிஸ் ஒப்பந்தத்தின் அடிப்படையில் மத்திய அரசாங்கம் நாடு முழுவதும் எலக்ட்ரானிக் வாகனங்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. மத்திய அரசு மற்றும் அரசு நிறுவனங்கள் சார்ந்த இடங்களில் அதிகாரிகள் பயன்படுத்தக்கூடிய வாகனங்கள் கிட்டத்தட்ட எலக்ட்ரிக் வாகனங்களாக மாற்றப்பட்டு பயன்படுத்தப்படும் சூழ்நிலையில் பொதுமக்கள் பயன்படுத்தும் இருசக்கர வாகனம் மற்றும் கார்கள் உள்ளிட்டவையும் எலக்ட்ரிக் வாகனங்களாக மாற்றுவதற்கு பல்வேறு திட்டங்களையும் நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
இருப்பினும் பொதுமக்களிடையே எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதில் சில தயக்கங்கள் இருக்கிறது, உதாரணமாக எலக்ட்ரிக் கார்களை வாங்க கூடிய பட்சத்தில் அதனை சார்ஜிங் செய்யக்கூடிய இடங்கள் நாடு முழுவதும் அதிக அளவில் இல்லை! குறிப்பிட்ட நகரங்களில் மட்டுமே அதிக அளவில் சார்ஜிங் ஸ்டேஷன் இருக்கின்ற நிலையில் தொலைதூரப் பயணங்களுக்கு எலக்ட்ரிக் வாகனங்கள் பயன்படுத்த முடியாது என்ற சூழலே உள்ளது. மத்திய அரசு சமீப மாதங்களுக்கு முன்னர் டாடா பவர் உள்ளிட்ட நிறுவனங்களுடன் ஆலோசித்து நாடு முழுவதும் எலெக்ட்ரிக் சார்ஜிங் ஸ்டேஷன்களை நிறுவ முடிவு செய்தது.
அதன் அடிப்படையில் கடந்த ஜூலை மாதம் அரசால் நடத்தப்படக் கூடிய ஹிந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனம் டாடா பவர் நிறுவனத்துடன் கைகோர்த்து நாட்டின் சிறு சிறு நகரங்களை இணைக்க கூடிய வகையில் ஹிந்துஸ்தான் பெட்ரோல் பங்குகளில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்களில் அமைக்கக்கூடிய பணிகளை தொடங்கியுள்ளது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் தலைவர் எஸ் எம் வைத்யா, அடுத்த மூன்று ஆண்டுகளில் நாடு முழுவதும் 10 ஆயிரம் எலக்ட்ரிக் சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அடுத்த ஒரு வருடத்தில் 2000 சார்ஜிங் ஸ்டேஷன்களும், 2 வருடங்களில் 8000 சார்ஜிங் ஸ்டேஷன்களும், மூன்று வருடங்களில் பத்தாயிரம் சார்ஜிங் ஸ்டேஷன்கள் என படிப்படியாக ஒவ்வொரு ஆண்டும சார்ஜிங் ஸ்டேஷன் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என தெரிவித்துள்ளார். இதன் மூலம் நாடு முழுவதும் எலக்ட்ரிக் வாகனங்கள் வைத்து இருக்கக்கூடியவர்கள் எவ்வித அச்சமும் இன்றி தொலைதூரம் பயணிக்க முடியும் எனவும் ஒட்டுமொத்த நாட்டில் கார்பன் வெளியேற்றம் என்பது மிகப்பெரிய அளவில் குறையும் எனவும் எஸ் எம் வைத்யா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.