கடலூரில் பெண்ணையாற்றின் குறுக்கே 33 கோடி ரூபாய் மதிப்பிலும், காஞ்சிபுரத்தில் 42 கோடி ரூபாய் மதிப்பிலும் கட்டப்பட உள்ள புதிய தடுப்பணைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
தமிழ்நாடு அரசு நீர்வள ஆதாரத் துறை மூலமாக பல்வேறு பாசன மேம்பாட்டுத் திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், கடலூர், கண்டரக்கோட்டை கிராமத்தில், பெண்ணையாற்றின் குறுக்கே 33 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணிக்கு முதலமைச்சர் இன்று காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார். புதிதாக கட்டப்படவுள்ள இத்தடுப்பணையின் நீளம் 575 மீட்டர், உயரம் 1.50 மீட்டர் மற்றும் கொள்ளளவு 28.58 மில்லியன் கன அடி ஆகும். மேலும், தடுப்பணையின் மேற்புறம் 1,500 மீட்டர் மற்றும் கீழ்புறம் 500 மீட்டர் தூரத்திற்கு இருபுறமும் வெள்ளத்தடுப்பு கரைகள் அமைக்கப்படவிருக்கின்றன. இந்த தடுப்பணை கட்டுவதன் மூலம் நிலத்தடி நீர் செறிவூட்டப்பட்டு, நிலத்தடிநீர் மட்டம் வெகுவாக உயரும். இதனால் விவசாய உற்பத்தி அதிகரிப்பதோடு குடிநீரின் தரமும் உயரும்.
இதனால், இப்பகுதியிலுள்ள 728 ஆழ்குழாய் கிணறுகள் மூலம் 2912 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். திருவள்ளூர், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட 1,602 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில், காட்டூர் தத்தமஞ்ஜி இரட்டை ஏரிகளை இணைத்து, கொள்ளளவினை மேம்படுத்தி, நீர்தேக்கத்தை உருவாக்கிட 62 கோடியே 36 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான திட்டம், காஞ்சிபுரம், உள்ளாவூர் அருகில் பாலாற்றின் குறுக்கே 42 கோடியே 16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணி, கடலூர், எலந்தம்பட்டு கிராமத்தில், கெடிலம் ஆற்றின் குறுக்கே 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணி, கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில், உளுந்தூர்பேட்டை மற்றும் பண்ருட்டி வட்டங்களில், மலட்டாற்றினை தொலைகல் 24,000 மீட்டர் முதல் 40,000 மீட்டர் வரை 15 கோடியே 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைத்து மேம்படுத்தும் பணி,
நாகப்பட்டினம், வெள்ளப்பள்ளம் உப்பனாற்றின் குறுக்கே தொலைகல் 21.200 கிலோ மீட்டரில், 30 கோடியே 96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கடைமடை நீரொழுங்கி கட்டும் பணி, சிவகங்கையில் உப்பாற்றின் குறுக்கே, குறுக்கு கட்டுமான கட்டமைப்புகளை 14 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கும் பணி, ராமநாதபுரம், மன்னார் வளைகுடா கடலோரப் பகுதியில் 11 கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பு சுவர் அமைக்கும் பணி மற்றும் திருவாடனை வட்டம், முள்ளிமுனை கிராமம் அருகே மன்னார் வளைகுடா கடலோரப் பகுதியில் 4 கோடியே 23 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பு சுவர் அமைக்கும் பணி.
புதுக்கோட்டை, பேராம்பூர் வாரியின் குறுக்கே 2 கோடியே 98 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அணைக்கட்டு கட்டும் பணி, திருப்பூர், உடுமலைக்கால்வாய் தொலைகல் 16.600 கி.மீ முதல் 23.170 கி.மீ வரை மற்றும் அதன் பகிர்மானக் கால்வாய்களில் விடுபட்டுள்ள கால்வாயினை 2 கோடியே 96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கும் பணி, திருவாரூர், திருக்கண்ணமங்கை வாய்க்காலில் உள்ள கட்டுமானங்களை 2 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சீரமைத்தல் மற்றும் கரைகளை பலப்படுத்தி புனரமைக்கும் பணி, விருதுநகர் அம்மாபட்டி மற்றும் வடுகபட்டி கிராமங்களில் அர்ஜுனா நதியின் குறுக்கே 2 கோடியே 59 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணி, பொள்ளாச்சி, பரம்பிக்குளம் பிரதானக் கால்வாயினை தொலைகல் 36 கி.மீ முதல் 39.50 கி.மீ வரை 2 கோடியே 37 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மறுசீரமைக்கும் பணி என மொத்தம் 280 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 22 திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் இன்று அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் எம்.சி. சம்பத், தலைமைச் செயலாளர் சண்முகம் ஆகியோர் பங்கேற்றனர்.