அரசுமுறைப் பயணமாக ஸ்பெயின் நாட்டுக்கு சென்றிருந்த தமிழ்நாடு முதலமைச்சர் இன்று காலை நாடு திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஸ்பெயின் நாட்டுப் பயணம் சாதனைப் பயணமாக அமைந்துள்ளதாகத் தெரிவித்தார். காற்றாலை, நீர்மறுசுழற்சி, உயர்தர வீட்டுகட்டுமான தயாரிப்பு, கண்டெய்னர், சாலை கட்டமைப்பு, மோட்டார் உதிரி பாகங்கள் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி முதலீடுகளை ஈர்த்தாக முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டார். உற்பத்தி துறையில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்குவதாக குறிப்பிட்ட அவர் மூன்றாயிரத்து 440 கோடி ரூபாய் முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்த கேள்விக்குப் பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களுக்குத் தொண்டாற்ற யார் வந்தாலும் மகிழ்ச்சி அடைவேன் எனக் குறிப்பிட்டார்.