பா.ஜ.க-வின் மாநிலத் துணைத் தலைவர்களுள் ஒருவரான நயினார் நாகேந்திரன், திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக பா.ஜ.கவில் அடையளம் சொல்லக்கூடிய அளவிற்கு இருக்கக் கூடிய தலைவர்களில் ஒருவர் நயினார் நாகேந்திரன். முன்னாள் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை தொடர்ந்து, மாநிலத் தலைவர் பொறுப்பை பிடிக்க நயினார் தீவிரம் காட்டினார். ஆனால், அவருக்கு துணைத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டதால், அவர் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. நயினாரின் குழப்ப நிலையை அறிந்த திருநெல்வேலி தி.மு.க நிர்வாகிகள் சிலர், அவரைக் கட்சிக்குள் இழுத்துவர கடுமையாக முயற்சி செய்வதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், சில நாட்களுக்கு முன்னர் திருச்சியில் கே.என்.நேருவைச் சந்தித்து நயினார் நாகேந்திரன் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாக வெளியாகியுள்ள தகவல்கள் இந்த செய்திக்கு மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதன்படி, கடந்த வாரம் திருச்சி வந்திருந்த நயினார் நாகேந்திரன், தி.மு.க-வின் முதன்மைச் செயலாளர் கே.என்.நேருவையும் திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.
தி.மு.க-வில் இணைவதற்கு தனக்குள்ள நிபந்தனைகளாக, திருநெல்வேலி கிழக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பை நயினார் குறிவைத்துள்ளாதாக கூறபடுகிறது. கிட்டத்தட்ட பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

திருநெல்வேலியைப் பொறுத்தவரையில் நாங்குநேரி தொகுதியில் தனது சமூகத்தினரின் அதிக வாக்குகள் இருப்பதால், அந்தத் தொகுதியை தனக்கு ஒதுக்குமாறு நயினார் நாகேந்திரன் கேட்டிருக்கிறாராம். இந்தத் தகவல் ஸ்டாலினிடம் கொண்டு சேர்க்கப்பட்டு, அவரும் சம்மதித்திருப்பதாகக் கூறப்படுகிறது. நாங்குநேரி, ராதாபுரம், அம்பாசமுத்திரம் தொகுதிகளை உள்ளடக்கிய மாவட்டத்துக்கு நயினார் நாகேந்திரனை மாவட்டச் செயலாளராக நியமிக்கவும் ஸ்டாலின் ஓகே சொல்லியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த வேதரத்தினம் சமீபத்தில் பா.ஜ.கவில் இருந்து தாய்க்கழகம் திரும்ப, தற்போது நயினார் நாகேந்திரன் தொடர்பான செய்திகள் தமிழக பா.ஜ.கவிற்கு பின்னடைவாக கருதப்படுகிறது.




