ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்திற்கு சென்ற இரு நாசா ஆராய்ச்சியாளர்கள், 2 மாத ஆராய்ச்சிக்குப் பிறகு வெற்றிகரமாக இன்று அதிகாலை பூமிக்கு திரும்பினர்.

அமெரிக்காவின் பிரபல சொகுசு கார் நிறுவன தலைவரான எலான் மஸ்கின், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்திற்காக க்ரூ டிராகன் விண்கலமுடன் கூடிய பால்கன் 9 ரக ராக்கெட்டை தயாரித்திருந்தது.
கடந்த மே 31-ம் தேதி புளோரிடாவில் உள்ள கென்னடி ஏவுதளத்திலிருந்து இந்த ராக்கெட் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தை நோக்கி பயணத்தை தொடங்கியது. இதில் நாசா ஆராய்ச்சியாளர்கள் பாப் பென்கென் மற்றும் டக் ஹர்லி ஆகியோர் விண்ணுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதன் மூலம் விண்வெளிக்கு வீரர்களை அனுப்பிய முதல் தனியார் நிறுவனம் என்ற பெருமையை எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் பெற்றது.

அதைத்தொடர்ந்து, சர்வதேச விண்வெளி நிலையத்தில் 2 மாதங்கள் தங்கி ஆராய்ச்சி செய்து வந்த ராபர்ட் பெஹன்கென் மற்றும் டக்ளஸ் ஹர்லி ஆகியோர் அங்கிருந்து புதிய க்ரூ டிராகனில் சனிக்கிழமை பூமிக்கு திரும்பும் பயணத்தை தொடங்கினர்.
கடைசியாக நிலவுக்கு அனுப்பப்பட்ட அப்பலோ விண்கலத்தை தொடர்ந்து, கடந்த 45 ஆண்டுகளில் ஒருமுறை கூட விண்வெளியில் இருந்து திரும்பிம்போது, ஸ்ப்லேஷ் டவுன் எனப்படும் கடலில் தரையிறங்கும் முயற்சியை அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டதில்லை. நீண்ட நாட்களுக்கு பிறகு அம்முறை பின்பற்றப்பட்டதால் நாசாவிக் சற்று பரபரப்பான சூழல் காணப்பட்டது.
இந்நிலையில், சுமார் 21 மணி நேரம் பயணித்த இருவரும் அதிகாலை மெக்சிகோவின் வளைகுடா கடல்பகுதியில் தரையிறங்கினர். 17,500 மைல் வேகத்தில் வந்த விண்கலம் பாராசூட் உதவியுடன் படிப்படியாக 15 மைல் வேகத்திற்கு குறைக்கப்பட்டது.

டிராகன் பாரசூட் தரையிறங்கியதும் படகு மூலம் கடற்கரைக்கு அழைத்து வரப்பட்ட விண்வெளி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மருத்துவ பரிசோதனைக்கு பின் குடும்பத்தினரை சந்திக்க வீரர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து பேசியுள்ள எலான் மஸ்க், நீங்கள் உலகின் எந்த பகுதியை சேர்ந்தவராக இருந்தாலும் சரி, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் இந்த வெற்றியானது அனைவருக்கும் சொந்தம் என குறிப்பிட்டுள்ளார்.