டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் தனது ஆர்டிஆர்200 4வி மோட்டார்சைக்கிள் விலையில் திடீரென மாற்றம் செய்து அறிவித்துள்ளது.
டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் அபாச்சி ஆர்டிஆர்200 4வி மாடல் பைக், இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. பிஎஸ்6 தொழில்நுட்பத்தில் 2 வேரியன்ட்களில், 3 நிறங்களில் இந்த பைக் மாடல் சந்தையில் கிடைக்கிறது. அறிமுகம் செய்யப்பட்டது முதலே, இந்த மாடல் பைக் வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
இந்நிலையில், டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனம் ஆர்டிஆர்200 4வி சீரிஸ் விலையை ரூ. 1500 வரை உயர்த்தி உள்ளது. புதிய அறிவிப்பின்படி, டாப் எண்ட் டூயல் டிஸ்க் மாடல் விலை ரூ. 1,30,050 என்றும் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் மாடல் ரூ. 1,25,500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
விலை உயர்வு மட்டுமின்றி, விற்பனையை ஊக்குவிக்கும் நோக்கில் டிவிஎஸ் பல்வேறு பண்டிகை கால சலுகைகளையம் அறிவித்துள்ளது. இதன் மூலம் பயனர்கள் மிக குறைந்த முன்பணம் செலுத்துவதோடு மாதம் ரூ. 2,999 எனும் மாத தவணையில் பைக்கை வாங்கி கொள்ள முடியும்.
இத்துடன் முதல் மூன்று மாதங்களுக்கு மாத தவணையில் 50 சதவீதத்தை மட்டும் செலுத்தி மீதமுள்ள தவணையை மற்ற மாதங்களில் செலுத்தலாம். மேலும் டிவிஎஸ் நிறுவனம் மாத தவணை முறையை எளிமையாக்கி, கடன் வழிமுறையே வேகமாக நிறைவு செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.