பிரபல சொகுசு கார் நிறுவனமான ஃபெராரி பல்வேறு புதிய அம்சங்களுடன் கூடிய F8 எனப்படும் ட்ரிபியூட்டோ சூப்பர் காரை அறிமுகம் செய்துள்ளது.
ஆடம்பர கார் நிறுவனங்களில் ஒன்றான ஃபெராரி F8 ட்ரிபியூட்டோ மாடல் சூப்பர் காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. டெல்லியில் உள்ள ஃபெராரி நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளரான செலக்ட் கார்ஸ் இந்த மாடலை அறிமுகம் செய்து வைத்துள்ளது. இந்திய சந்தையில் இந்த காரின் தொடக்க விலை சுமார் 4.02 கோடி ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
F8 மாடலின் விநியோகம் இந்திய சந்தையில் விரைவில் தொடங்க உள்ளது. முன்னதாக ஃபெராரி F8 ட்ரிபியூட்டோ மாடல் கடந்த ஆண்டு ஜெனீவா மோட்டார் விழாவில் முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஃபெராரி சூப்பர் காரில் 3.9 லிட்டர் ட்வின் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட வி8 என்ஜின் பொருத்தப்பட்டு உள்ளது.
இதில் இடம்பெற்றுள்ள என்ஜின் 710 பிஹெச்பி பவர், 770 என்எம் டார்க் செயல்திறனை வழங்ககூடியது. 488 GTB மாடலுடன் ஒப்பிடும்போது 50 PS மற்றும் 10 NM கூடுதல் இழுவிசை கொண்டது. இந்த மாடல் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 2.9 நொடிகளிலும், 200 கிமீ வேகத்தை 7.8 நொடிகளிலும் எட்டிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், மணிக்கு அதிகபட்சமாக 340 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறனை F8 கொண்டுள்ளது.
F8 ட்ரிபியூட்டோ காரின் உட்புறம் 7 இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் புதிய ஹெச்எம்ஐ (ஹியுமன் மெஷின் இன்டர்ஃபேஸ்) ஸ்டீரிங் வீல் மற்றும் புதிய ரவுண்ட் ஏர் இன்டேக்குகள் வழங்கப்பட்டு உள்ளன.
488GTB ஐ விட ட்ரிபியூட்டோ 10% அதிக காற்றோட்டம் கொண்டது என கூறப்படுகிறது. F8 கார் 4611 மிமீ நீளம், 1979 மிமீ அகலம் மற்றும் 1206 மிமீ உயரம் கொண்டது மற்றும் அலுமினிய அல்லாய் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது.