விலை உயர்ந்த போர்ஷ் நிறுவன கார் மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஸ்போர்ட்ஸ் கார் உற்பத்தி நிறுவனமானபோர்ஷ், 718 ஸ்பைடர் மற்றும் 718 கேமன் ஜிடி4 ஆகிய மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ள போர்ஷ் 718 ஸ்பைடர் காரின் விலை ரூ.1.59 கோடி எனவும், கேமன் ஜிடி4 மாடலின் விலை ரூ. 1.63 கோடி எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேற்குறிப்பிடப்பட்ட விலைகள் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

போர்ஷ் 718 ஸ்பைடர் மற்றும் கேமன் ஜிடி4 ஆகிய இரு மாடல்களில் 4.0 லிட்டர் 6 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் இடம்பெற்றுள்ளது. இந்த என்ஜின் 415 பிஹெச்பி பவர் மற்றும் 420 Nm டார்க் செயல்திறன் கொண்டுள்ளது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஸ்டான்டர்டு சிரப்பம்சமாக வழங்கப்படுகிறது.

இரு கார் மாடல்களும் 0 முதல் 100 கிலோமீட்டர் என்ற வேகத்தை வெறும் 4.4 நொடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டுள்ளன. 718 ஸ்பைடர் மாடல் மணிக்கு 301 கிலோமீட்டர் வேகத்திலும், 718 கேமன் ஜிடி4 மாடல் மணிக்கு 304 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.




