டிஜிட்டல் முறையில் கடன்வழங்கும் நிறுவனங்களுக்கான முதல்கட்ட விதிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
செல்போன் செயலி வாயிலாக பல்வேறு நிறுவனங்கள் டிஜிட்டல் முறையில் கடன்வழங்கி வருகின்றன. இந்நிலையில் இதுதொடர்பான புகார்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்த மோசடிகளை தவிர்க்கும் விதமாக ரிசர்வ் வங்கி டிஜிட்டல் முறையில் கடன் வழங்குவது குறித்து முதல் கட்ட விதிமுறையை வெளியிட்டுள்ளது.
இதன்படி, கடன் கொடுப்பது அல்லது வசூலிப்பது போன்ற அனைத்தும் மூன்றாம் நபர் அமைப்புகள் வாயிலாக அல்லாமல், வங்கி கணக்கு வாயிலாக மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளது. கடந்த 2021ல் இதுதொடர்பான விவகாரங்கள் குறித்து ஆராய ரிசர்வ் வங்கி ஒரு குழுவை நியமித்தது. இந்த குழுவானது தனது ஆலோசனைகளை ரிசர்வ் வங்கியிடம் வழங்கியது. இந்த குழுவின் பெரும்பான்மையான ஆலோசனைகளை ரிசர்வ் வங்கி ஏற்றுக்கொண்டுள்ளது. சில ஆலோசனைகளை அமல்படுத்துவதில் தொழில்நுட்ப ரீதியிலான பிரச்சனைகள் இருப்பதால் இவை ஆராயப்பட்டபின் முழுமையான விதிமுறைகள் வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.