2021 இல் மிகப்பெரிய கடனாளி நாடாக இந்தியா இருக்கும் என, பிரபல தனியார் நிறுவனத்தின் ஆய்வறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக பல நாடுகளின் பொருளாதாரம் பெரும் சரிவை சந்தித்துள்ளது.
இதுவரை இல்லாத அளவிற்கு இந்திய உள்நாட்டு உற்பத்தியும் 23.9 சதவிகிதம் சரிந்து பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.
இந்நிலையில், பிரபல பொருளாதார தர மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வளர்ந்து வரும் நாடுகளாக உள்ள இந்தியா,பிரேசில், தென் ஆப்பிரிக்கா போன்றவற்றின் கடன் 2019 ஆம் ஆண்டின் அளவைவிட 2021 ஆம் ஆண்டின் முடிவில் சராசரியாக 10% வரை அதிகரிக்கலாம் என்று நிறுவனம் குறிப்பிடப்பட்டுள்ளது. சில நாடுகள் ஏற்கனவே உள்ள கடனுக்கு அதிக வட்டி செலுத்த வேண்டி வரலாம் என்பதாலும் கடன் மேலும் அதிகரிக்கலாம் என்றும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டில் பிரேசில், இந்தியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளின் கடன் சுமை வளரும் நாடுகளிலேயே அதிகமாக இருக்கும். ஏனெனில் இந்தியா, மெக்சிகோ, தென் ஆப்பிரிக்கா, துருக்கி ஆகிய நாடுகளில் நிதித்துறை பலவீனமாக இருக்கிறது. அதோடு சில நாடுகளில் நிரந்தரமான செலவு பிரச்சினைகளும் உள்ளன. இந்த பிரச்சனைகள் மேலே சொன்ன நாடுகளில் சிக்கலை அதிகப்படுத்துகின்றன என்றும், மூடிஸ் குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவில் வேலையின்மை அதிகரித்து வரும் நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் நகர்ப்புற வேலை வாய்ப்பின்மை10 சதவிதமாக அதிகரித்துள்ளது என இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஜனவரியில் 7. 22%, பிப்ரவரியில் 7.26% ஆக இருந்த வேலையின்மை, மார்ச் மாதம் கொரோனா பெருந் தொற்று க்குப் பின்னர் தொழில் துறைக்கு ஏற்பட்ட பாதிப்பால் வேகமாக அதிகரித்துள்ளது. இந்திய பொருளாதாரம் கண்காணிப்பு மத்திய மையத்தின் தரவுகள் படி, ஜூலை மாதத்தில் நகர்ப்புற வேலைவாய்ப்பு இன்மை முறையான துறையில் (formal sector) 9.15 சதவீதமாக இருந்தது. இது ஆகஸ்ட் மாதத்தில் 9. 83% ஆக அதிகரித்துள்ளது. கிராமப்புறத்தில் ஜூலை மாதம் 6.67% இருந்த வேலை இன்மை ஆகஸ்டில் 7.75% அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தமாக வேலையின்மை ஜூலையில் 7.43-ல் இருந்து 8.35% உயர்ந்துள்ளது.