சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரன் ரூ 38 ஆயிரத்தை தாண்டி வரலாறு காணாத அளவுக்கு பெரும் விலையேற்றத்தை கண்டுள்ளது.
தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 25 ஆயிரம் என இருந்தது. இன்று அப்படியே 50 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது.
என்னதான் ஊரடங்கால் பொருளாதாரம் சரிவில் இருந்தாலும் தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே செல்வது, தற்போது திருமணம் நடத்துவோருக்கு பெரும் அதிர்ச்சியை கொடுக்கிறது. சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ 37,736-க்கு விற்பனையானது. ஆனால் இன்று 544 ரூபாய் உயர்ந்து ரூ 38,280-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராமுக்கு ரூ 68 உயர்ந்து ரூ.4,785 க்கு விற்பனையாகிறது. அது போல் 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 40,152 ரூபாயாக உள்ளது.
வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று 60,100 ரூபாயாக இருந்த நிலையில் இன்று 65,700 ரூபாயாக உள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ 65.70 ஆக உயர்ந்துள்ளது. கடந்த இரு தினங்களில் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ 10 வரை அதிகரித்துள்ளது.
இந்த விலையேற்றம் இதற்கு முன்னர் இல்லாத அளவுக்கு நிகழ்ந்துள்ளது. இது நகை வாங்குவோரை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
தங்கம் விலை உயர்வுக்கு என்ன காரணம் ?
சர்வதேச அளவில் தங்கத்தின் முதலீடு அதிகரித்ததே விலை உயர்வுக்கு காரணம் என்கிறார், தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்க பொதுச் செயலாளர் சாந்த குமார்.
“நாட்டின் பணவீக்க உயர்விற்கு முக்கிய ஆதாரமாக கருதப்படும் தங்கத்தில் இந்திய மக்கள் மட்டுமல்லாமல் உலக மக்களும் அதிகளவில் முதலீடு செய்தும், பயன்படுத்தியும் வருகின்றனர். தங்கத்தை பாதுகாப்பான மற்றும் லாபகரமான முதலீடாக சமானியர்கள் மட்டும் அல்லாமல் பங்குச்சந்தை முதலீட்டாளர்களும் கருதுகின்றனர். உலகின் பொருளாதார மந்த நிலை காரணமாக முதலீட்டாளர்கள் அனைவரும் தங்கத்தின் மீதே முதலீடு செய்து வருகின்றனர்.அதனால் தான் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தாண்டு இறுதிக்குள் தங்கத்தின் விலை சவரன் 40 ஆயிரத்தை தாண்டும். இதே போல் 2022ம் ஆண்டுக்குள் தங்கம் சவரன் ரூ.60,000 – ரூ.80,000 ஆக இருக்கும்” என்கிறார், சாந்த குமார்.
தங்க நகைகளை விரும்பும் பெண்கள்
தங்கம் விலை தொடர்ந்து தாறுமாறாக அதிகரித்து வரும் நிலையில், அதை வாங்கி சேகரித்தவர்களுக்கு வாழ்வு தான்.
தேவைக்கு சொந்த பந்தங்களும் கை விரிக்கும் போது, கையில் கிடைக்கும் தங்கம் தான், பணத் தேவையை பூர்த்தி செய்யும் உற்ற நண்பன். முறையாக தங்கத்துக்கு இவ்வளவு ரூபாய் தான் கடன் என கணக்கு பார்க்கும் வங்கிகள் நிதி நிறுவனங்கள் தொடங்கி, அடகுக் கடைகள் வரை எங்கு போய் தங்கத்தை வைத்தாலும் பணம் கிடைக்கும்.
அப்படிப்பட்ட தங்கத்தை, 2019-ம் ஆண்டின் தொடக்கத்தில், தங்க பத்திரங்களாகவோ அல்லது தங்க நகைகளாகவோ அல்லது தங்க ஃபண்டுகள் (Gold ETF) என எப்படி வாங்கி இருந்தாலும் இன்று கணக்கு போட்டு பார்த்தால் ஒரு சூப்பர் லாபத்தைப் பார்த்து இருக்கலாம். அப்படி எவ்வளவு ரூபாய் லாபம் பார்த்து இருக்கலாம் என்று கேட்கிறீர்களா?
2019-ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து கணக்கு பார்ப்போம். கடந்த ஜனவரி 01, 2019-ல் 31,650 ரூபாய்க்கு விற்கத் தொடங்கிய 24 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை, பிப்ரவரி 20, 2019 அன்று 35,130 என்கிற புதிய உச்சத்தைத் தொட்டது. பிப்ரவரி முதல் ஜூன் 20, 2019 வரை 24 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை இந்த ரூ.35,130 என்கிற உச்சத்தைக் கடக்கவே இல்லை. ஆக தங்கத்தின் விலை ஏற்றத்தில் இது தான் முதல் பெரிய ஏற்றம்.
பின், ஜூன் 21, 2019 அன்று தான் மீண்டும் தங்கத்தின் விலை, ஏற்றம் காணத் தொடங்குகிறது. ஜூன் 21, 2019 அன்று 24 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை 35,380 என்கிற உச்சம் தொடுகிறது. அதன் பின் தங்கத்தின் விலை நிதானமாக ஏற்றம் கண்டு வந்து, செப்டம்பர் 04, 2019 வரை ரூ.41,070 என்கிற புதிய உச்ச விலையில் விற்கப்பட்டது.
கடந்த செப்டம்பர் 04, 2019-க்குப் பின், ஜனவரி 02, 2020 வரை 24 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை பெரிய மாற்றங்களைக் காணவில்லை. 41,070 ரூபாய்க்குள் தான் விற்பனை ஆனது. ஆனால் கடந்த ஜனவரி 03, 2020 அன்று தான், தங்கம், மீண்டும் விலை ஏற்றம் காணத் தொடங்கி, மார்ச் 06, 2020 அன்று ரூ.46,160 ரூபாய்க்கு விற்பனை ஆனது. இது தான் தங்கத்தின் மூன்றாவது பெரிய விலை ஏற்றம்.
சரி கொரோனா வைரஸ் பயத்தால் தான் தங்கம் தடாலென விலை ஏற்றம் கண்டது, மீண்டும் சரியத் தொடங்கிறதே என சதோஷப்படுவதற்குள் மீண்டும் தங்கம் விலை டாப் கியர் போட்டு பறக்கத் தொடங்கியது. 06 மார்ச் 2020-க்குப் பிறகு மீண்டும் 27 ஏப்ரல் 2020 அன்று 24 கேரட் 10 கிராம் தங்கம் விலை ரூ.46,900 என புதிய உச்சத்தைத் தொட்டது.
27 ஏப்ரல் 2020-க்குப் பின், கொரோனா வைரஸ் பயம், பங்குச் சந்தை சரிவு போன்ற பல காரணங்களால், 24 கேரட் 10 கிராம் தங்கம் விலை 47000, 48000, 49000, 50000, 51000… என தற்போது 52,200 ரூபாயைத் தொட்டு இருக்கிறது. ஆக ஒருவர் 24 கேரட் 10 கிராம் தங்கத்தை 31,650 ரூபாய்க்கு வாங்கி இருந்தால், இன்று அவரின் முதலீடு 64 சதவிகிதம் விலை எகிறி இருக்கும். விற்று இருந்தால் 64% லாபம் பார்த்து இருக்கலாம்.
இந்தியாவில் பொருளாதார மந்த நிலை, ரியல் எஸ்டேட் & ஆட்டோமொபைல் போன்ற துறைகளில் காணப்பட்ட தேக்கம், அமெரிக்க சீன வர்த்தகப் போர், ரெசசன் பயம் என எல்லாம் சேர்ந்து தங்கத்தின் விலையை தாறு மாறாக எகிற வைத்தது. 2019-ம் ஆண்டு மத்தியில் 68.50 ரூபாய் வரை வலுவடைந்த அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, 2019-ம் ஆண்டு கடைசியில் ரூ.71.70 ரூபாய் வரை வலுவிழந்தது.
கொரோனா வைரஸ் மற்றும் அதைக் கட்டுப்படுத்த பல நாடுகளும் அறிவித்த லாக் டவுன், 71.70 ரூபாயாக இருந்த டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, 76.10 ரூபாய் வரை வலுவிழந்தது. அமெரிக்கா சீனாவுக்கு இடையிலான அரசியல் பதற்றம், சீனா இந்தியாவுக்கு இடையிலான போர் பதற்றம், பொருளாதாரம் செயல்பட முடியாத இக்கட்டான சூழல் போன்ற காரணங்களால் தங்கம் செம ஏற்றம் கண்டு கொண்டு இருக்கிறது.
அடுத்த 12 மாதங்களுக்கும் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 2,000 டாலரைத் தொடும் எனக் கணித்து இருக்கிறது உலகின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றான கோல்ட்மேன் சாக்ஸ். அதே போல சிட்டி பேங்கும் தங்கம் விலை ஏறும் எனக் கணித்து இருக்கிறது. உலக புகழ் பெற்ற கமாடிட்டி முதலீட்டாளர் ஜிம் ராஜர்ஸும் தங்கம் ஒரு நல்ல விலை ஏற்றத்தைக் காணும் எனக் கணித்து இருக்கிறார். ஆக தங்கம் விலை ஏற்றம் எங்கு போய் நிற்குமோ அது தங்கத்துக்கு தான் வெளிச்சம்.