மார்க் ஆண்டனி முன்னோட்டத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், நடிகர் விஷால் நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

விஷாலின் 33-வது படமாக மார்க் ஆண்டனி திரைப்படம் உருவாகி வருகிறது. திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன், பஹீரா ஆகிய படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இந்த படத்தை இயக்குகிறார். படத்தில் ரித்து வர்மா நாயகியாக நடித்துள்ளார் அதோடு எஸ் ஜே சூர்யா, செல்வராகவன், தெலுங்கு நடிகர் சுனில், மலேசிய நடிகர் டிஎஸ்ஜி, நடிகை அபிநயா ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி ஒரே நாளில் 24 லட்சம் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து வருகிறது. முன்னோட்டத்திற்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து நடிகர் விஷால் வீடியோ வெளியிட்டுள்ளார்.
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் உருவாகியுள்ள திரைப்படம் வரும் செப்டம்பர் 15ம் தேதி வெளியாகிறது. அதேபோல, இந்தி பதிப்பு செப்டம்பர் 22ம் தேதி வெளியாகிறது.