தடை செய்யப்பட்ட போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் ஷாருக்கான் மகன் ஆர்யன் கைது செய்யப்பட்டதை அடுத்து அவர் வீட்டுக்கு சல்மான் கான் சென்றார்.
இந்தியாவின் உல்லாசக் கப்பலான எம்பிரஸ், மும்பையில் இருந்து கோவாவுக்கு நேற்று முன் தினம் புறப்பட்டது. அந்தக் கப்பலில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களுடன் பார்ட்டி நடக்க இருப்பதாக, போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அந்த கப்பலில், போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் மும்பை மண்டல இயக் குனர் சமீர் வான்கடே தலைமையிலான அதிகாரிகள் சிலர், பயணம் மேற்கொள்பவர்கள் போல டிக்கெட் வாங்கி கொண்டு கப்பலில் ஏறினர். அப்போது, போதை பார்ட்டியில் கலந்துகொண்ட ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உட்பட 8 பேர்களிடம் அவர்கள் விசாரணை மேற்கொண்டனர். அவர்களிடம் இருந்து தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களும் கைப்பற்றப்பட்டன.
சுமார் 20 மணி நேர விசாரணைக்குப் பிறகு ஆர்யன் கான் உட்பட 3 பேர் கைது செய்யப் பட்டனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை இன்று (திங்கட்கிழமை) வரை காவலில் விசாரிக்க போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. இந்நிலையில் அவர்கள் இன்று ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, பிரபல பாலிவுட் ஹீரோ சல்மான் கான், நேற்றிரவு திடீரென ஷாருக்கான் வீட்டுக்குச் சென்றார். ஆர்யன் கைது செய்யப்பட்டதை அடுத்து அவர் ஷாருக் வீட்டுக்கு சென்றது குறித்து மீடியாவினர் அவரிடம் கேள்வி கேட்க முயன்றனர். அவரது பாதுகாவலர்கள் அதற்கு அனுமதி வழங்கவில்லை.