
அவதார் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கிளிம்ப்ஸ் காட்சிகள் இணையத்தில் கசிந்துள்ளது ரசிகர்களையும் படக்குழுவினரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
ஆஸ்கார் விருது வென்ற புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேம்ரூன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் அவதார் 2. கடந்த 2009-ம் ஆண்டு இந்த படத்தின் முதல் பாகம் வெளியானது. அதையடுத்து 13 ஆண்டுகள் கழித்து இரண்டாம் பாகம் வெளிவரவுள்ளது.
இதனால் உலகமே பெரியளவில் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டுள்ளது. வரும் டிசம்பர் மாதம் வெளியாகும் இந்த படத்தின் கிளிம்ப்ஸ் காட்சிகள் அமெரிக்காவில் நடந்த ஒரு தனியார் நிகழ்ச்சியில் திரையிடப்பட்டது. இந்த படத்துக்கு அவதார்: தி வே ஆஃப் வாட்டர் என்று பெயரிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் திரையிடப்பட்ட சில நிமிடங்களில் படத்தின் கிளிம்ப்ஸ் காட்சிகள் ட்விட்டர் உள்ளிட்ட இணையதளங்களில் திருட்டுத்தனமாக வெளியிடப்பட்டுள்ளது. இது படக்குழுவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்துக்கு மொழிகளை கடந்து நாடுகளை கடந்து பெரும் எதிர்பார்ப்பு நிலவுவதால் ரசிகர்கள் தொடர்ந்து பார்த்து வருகின்றனர்.
இதனால் திட்டமிடப்பட்டதற்கு முன்னதாகவே அவதார் 2 படத்தின் டீசர் அல்லது டிரெய்லரை திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என ஹாலிவுட் ஊடகங்கள் சில செய்திகளை வெளியிட்டுள்ளன.