நடிகர் கார்த்தி-ரஞ்சனி தம்பதியருக்கு 2-வதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது.
நடிகர் சிவக்குமாரின் 2-வது மகன் கார்த்தி. அமெரிக்காவில் படித்த கார்த்தி, இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக இணைந்து பணியாற்றி வந்தார். இந்நிலையில் அமீர் இயக்கிய பருத்திவீரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார் நடிகர் கார்த்தி.
இந்தப் படம் சிறப்பாக ஓடி அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. இந்தப் படத்தில் நடித்த பிரியாமணிக்கு, சிறந்த தேசிய நடிகை விருதையும் படம் பெற்றுத் தந்தது.
முதல் படத்திலேயே முத்திரை பதித்த கார்த்தி, தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், பையா, சிறுத்தை, தீரன் அதிகாரம் ஒன்று, நான் மகான் அல்ல, கைதி, மெட்ராஸ் என பல சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்தார்.
இவர் கடந்த 2011-ஆம் ஆண்டு ரஞ்சனி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதிக்கு கடந்த 2013-ஆம் ஆண்டு உமையாள் என்ற பெண் குழந்தை பிறந்தது. அதையடுத்து சுமார் 7 ஆண்டுகள் கழித்து தற்போது கார்த்தி – ரஞ்சனி தம்பதினருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதை நடிகர் கார்த்தி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதையடுத்து கார்த்தி-ரஞ்சனி தம்பதியினருக்கு நடிகர், நடிகைகள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.