பிக்பாஸ் சீசன் நான்கு நேற்று வெற்றிகரமாக தொடங்கப்பட்டது. மீடியாக்களால் ஓரளவுக்கு யூகிக்கப்பட்ட போட்டியாளர்கள் தான் நேற்று வீட்டிற்குள் சென்றார்கள்.
‘யாரென்று தெரிகிறதா, இவன் தீயென்று புரிகிறதா தடைகளை வென்றே சரித்திரம் படைத்தவன் நியாபகம் வருகின்றதா?’
என்னும் விஸ்வரூபம் திரைப்பட பாடலின் மெட்டுக்களோடு புதிய வார்த்தைகள் கோர்த்த பாடல் பின்னணியில் இசைக்க உலக நாயகனின் என்ட்ரி அனல் பறந்தது.
பிக்பாஸ் வீட்டில் இத்தனை சீசன்களில் இல்லாத அளவு நிறைய புதிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.
பிக்பாஸ் நான்காவது சீசன் இன்று முதல் தொடங்கப்படுகிறது. முதன்முதலில் உலக நாயகன் கமல்ஹாசன் பிக்பாஸ் வீட்டினுள் சென்று அங்கு அமைக்கப்பட்டிருக்கும் புதிய ஏற்பாடுகளை மக்களிடையே விவரித்தார்.
அவை பின்வருமாறு:
1.பிக்பாஸில் இதுவரை மனித தொடர்புகளே இல்லாமல் போட்டியாளர்கள் வீட்டினுள் இருந்தனர். தற்போது உள்ளே தொலைபேசி அமைக்கப்பட்டுள்ளது. இன்கம்மிங் கால்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ள இந்த தொலைபேசி எதற்காக என இனி தான் தெரியும்.
2.மற்ற சீசன்களில் ஆண்கள் பெண்கள் படுக்கை அறைக்கு பொதுவான கதவு தான் இருக்கும். தற்போது இரண்டு படுக்கை அறைகளுக்கு நடுவே கதவுகள் அமைக்கப்பட்டு பூட்டப்பட்டிருக்கிறது.
3.கழிவறைகளில் ஒரு அறையும் பூட்டப்பட்டிருக்கிறது, இதற்கான காரணம் இன்னும் தெரிவிக்கப்படவில்லை.
4.பிக்பாஸ் வீட்டில் இந்த முறை உடற்பயிற்சி கூடமும் அமைக்கப்பட்டுள்ளது.
5.பிக்பாஸ் இரண்டாம் சீசனில் இருந்து தவறு செய்பவர்களுக்கு தண்டனை கொடுக்கும் விதமாக சிறை அமைக்கப்பட்டது. இந்த முறை இது கம்பிகள் இல்லாமல் கண்ணாடிகளால் அமைக்கப்பட்டுள்ளது.
6.கடந்த சீசனிலேயே நீச்சல் குளத்தில் தண்ணீர் நிரப்பப்படவில்லை. இந்த சீசனில் நீச்சல் குளம் முற்றிலும் வலைகளால் மூடப்பட்டுள்ளது. போன சீசனில் சாண்டி மாஸ்டர் நீச்சல் குளத்தில் விழுந்து அவருக்கு அடிப்பட்டது கூட காரணமாக இருக்கலாம்.
இவர்கள் தான் பிக்பாஸ் வீட்டின் அதிகாரப்பூரவ போட்டியாளர்கள்:
1.ரியோ ராஜ் (நடிகர் மற்றும் தொகுப்பாளர்)
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கானா காணும் காலங்கள் கல்லூரியின் கதை தொடரின் மூலமாக சின்னத்திரைக்கு அறிமுகமானவர் ரியோராஜ். பிறகு சன் மியூஸிக்கில் ஆங்கராக பல ஷோக்களை தொகுத்து வழங்கி பெண்களின் கனவு நாயகனாக வலம் வந்தார். பிறகு இவருக்கு விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி தொடரின் மூன்றாவது சீசனில் கதாநாயகனாக வாய்ப்பு கிடைத்தது. விஜய் டிவியில் பல ஷோக்களையும் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார். பின்பு 2019 ஆம் ஆண்டு நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளிவந்த நெஞ்சமுண்டு நேர்மையுண்டு திரைப்படத்தின் மூலமாக வெள்ளித்திரையில் ஹீரோவாக அறிமுகமானார், படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது. தனது எதார்த்த பேச்சினால் அனைவரையும் மகிழ்விக்கும் ரியோ பிக்பாஸ் வீட்டிற்கு சென்றால் எப்படி இருப்பார் என்பதை காண சற்று ஆவலாகவே உள்ளது.
2.சனம் ஷெட்டி (மாடல் மற்றும் நடிகை)
நடிகை மற்றும் விளம்பர மாடல் சனம் ஷெட்டி பிக்பாஸ் சீசன் மூன்றிலேயே வைல்ட் கார்டு எண்ட்ரியாக வருவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டவர். பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லாமலேயே அன்றைய தேதியில் பல பரபரப்பான திருப்பங்களை கொடுத்தவர். பிக்பாஸ் முடிந்த பிறகு கூட இவர் சம்மந்தப்பட்ட செய்திகள் நாளுக்கு நாள் வெளியாகிக் கொண்டு தான் இருந்தன. தர்ஷன் உடனான காதல் முறிவுக்கு பிறகு இப்பொழுது இவர் நான்காவது சீசனில் பங்கேற்கிறார்.
3.ரேகா (நடிகை)
80’s , 90’s கிட்ஸ்களால் மறக்க முடியாத கேரக்டர் ஜெனிஃபர் டீச்சர். நடிகை ரேகா கடலோர கவிதைகள், புன்னகை மன்னன், பொம்முக்குட்டி அம்மாவுக்கு, எங்க ஊரு பாட்டுக்காரன், சிகரம் போன்ற பல வெற்றி படங்களில் நடித்தவர். தற்பொழுது குணச்சித்திர கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். சமீபத்தில் விஜய் டிவியின் குக்கூ வித் கோமாளி ஷோவில் பங்கேற்றார்.
4.பாலாஜி முருகதாஸ் (மாடல் மற்றும் நடிகர்)
பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவராக கருதப்படும் பாலாஜி முருதாஸ் நடிகர் மற்றும் மாடல் ஆவார். பல நாடுகளில் நடைப்பெற்ற ஆணழகன் போட்டிகளில் பங்கேற்று விருதுகளையும் வாங்கியுள்ளார். மேலும் டைசன் என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
5.அனிதா சம்பத் (செய்தி வாசிப்பாளர் மற்றும் நடிகை)
போட்டியாளர்கள் பட்டியலில் யாரும் சிறிதும் எதிர்பாராமல் சேர்ந்த புதுவரவு தான் பிரபல செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத். இளைய தளபதியின் சர்க்கார் திரைப்படத்தில் நிமிட காட்சியில் வந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர். அவரின் தமிழுக்கு என்று இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் பல. சர்க்கார் திரைப்படத்திற்கு பிறகு திரைப்படங்களிலும் வெப் சிரிஸ்களிலும் நடித்து வருகிறா.
6.ஜித்தன் ரமேஷ் (நடிகர்)
ஜித்தன் ரமேஷ் என மக்களால் அறியப்படும் ரமேஷ் சௌத்ரி தயாரிப்பாளர் ஆர் பி சௌத்ரியின் மகன் மற்றும் நடிகர் ஜீவாவின் அண்ணன் ஆவர். சில திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் பிக்பாஸ் நான்காவது சீஸனின் போட்டியாளர்களில் ஒருவர்.
7.வேல்முருகன் (பாடகர்)
நாட்டுப்புற மற்றும் சினிமா பாடகர் வேல்முருகனும் போட்டியாளர்களில் ஒருவராவார்.
8.ஷிவானி நாராயணன் (சின்னத்திரை நடிகை)
விஜய் டிவியின் ஆண்டாள் அழகர் தொடரின் மூலமாக சின்னத்திரைக்கு அறிமுகமானவர் ஷிவானி நாராயணன். விஜய் மற்றும் ஜீ தமிழ் தொலைக்கட்சிகளில் தொடரின் நாயகியாக நடித்து கொண்டிருந்தார். இவர் தற்போது பிக்பாஸ் நான்காவது சீசனில் கலந்து கொள்ள போகிறார். சமூக வலைத்தளங்களில் இவர் இடும் புகைப்படங்களுக்கு வரவேற்புகள் எவ்வளவு இருக்கிறதோ அந்த அளவு எதிர்மறை விமர்சனங்களும் உண்டு.
9.ஆரி அர்ஜுனன் (நடிகர்)
இயக்குனர் ஷங்கரின் தயாரிப்பில் வெளிவந்த ரெட்டைச்சுழி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகர் ஆரி. நெடுஞ்சாலை திரைப்படத்தில் முற்றிலும் வித்தியாசமான தோரணையுடனும் முகபாவனையுடனும் நடித்திருப்பார். இந்த திரைப்படத்திற்காக விருதுகளும் பெற்றார். மாயா திரைப்படத்திலும் நடித்திருந்தார். நடிகராகவும் பிட்னெஸ் டிரைனராகவும் இருக்கும் ஆரி பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவர்.
10.சாம் (மாடல் மற்றும் டிரைனர்)
சாம் ஒரு மாடல் ஆவார். மேலும் இவர் பத்து ஆண்டுகளுக்கு முன்பு விஜய் டிவியில் நடந்த மிஸ்டர் ஆணழகன் போட்டியில் கலந்து கொண்டு மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
11.கேபிரியல்லா (விஜய் டிவி)
விஜய் டிவியின் டான்ஸ் ஷோ மூலம் மக்களிடையே அறிமுகமானவர் கேப்பிரியில்லா. அதன் பின் மூன்று திரைப்படத்தில் நடிகை ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார், சமுத்திரக்கனியின் அப்பா திரைப்படத்திலும் நடித்திருந்தார்.
12.அறந்தாங்கி நிஷா (நடிகை, பேச்சாளர், தொகுப்பாளர்)
திறமைக்கு நிறம் தடையில்லை என நிரூபித்துக் காட்டி பல பெண்களுக்கு முன்னுதாரணமாக இருப்பவர் அறந்தாங்கி நிஷா. கலக்க போவது யாரு போட்டியாளராக வந்து நின்று ஜெயித்துக் காட்டி தற்போது விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். வெள்ளித்திரையிலும் வெற்றிக்கொடி ஏற்றி வரும் நிஷா பல சமூக சேவைகளையும் செய்து வருகிறார். மேலும் சமூகத்தில் நடக்கும் விரும்பத்தகாத விஷயங்களுக்கு எதிராக குரல் எழுப்பியும் வருகிறார். எப்பொழுதும் சிரித்த முகத்துடன் கலகலப்பாக இருந்து வரும் நிஷா பிக்பாஸ் வீட்டிலும் அதை கடைப்பிடிப்பாரா என்பது இனி வரும் காலங்களில் தான் தெரியும்.
13.ரம்யா பாண்டியன் (நடிகை)
2016 ஆம் ஆண்டு வெளிவந்த ஜோக்கர் திரைப்படத்தில் மூலம் தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். இவர் நடிகர் அருண் பாண்டியனின் உறவினர் ஆவார். ஜோக்கர் திரைப்படத்திற்கு பிறகு சமுத்திரக்கனியுடன் ஆண் தேவதை திரைப்படத்தில் நடித்திருந்தார். இவரின் திரைப்படங்களை விட இவர் வெளியிட்ட மொட்டை மாடி புகைப்படங்களின் மூலம் இவருக்கு ரசிகர்கள் அதிகமானார்கள். அதன் பிறகு குக் வித் கோமாளி ஷோவில் பங்கேற்றார். ரம்யா – புகழ் காம்பினேஷன்காகவே அந்த ஷோவை பலரும் பார்த்தனர், அதில் மூன்றாவது இடத்தைப் பிடித்தார். பிறகு கலக்க போவது யாரு ஷோவில் நடுவராகவும் இருந்தார்.
14.சம்யுக்தா (மாடல் மற்றும் தொழிலதிபர்)
சம்யுக்தா மாடல் மற்றும் தொழிலதிபர் ஆவார்.
15.சுரேஷ் சக்கரவர்த்தி (நடிகர்)
சுரேஷ் சக்ரவர்த்தி 90s காலங்களில் நடித்த நடிகர் ஆவார். ஆணழகன் திரைப்படத்தில் மம்மூட்டி வீட்டின் பணியாளராக நடித்திருப்பார். தற்போது இவர் யூட்யூப்பில் குக்கரி ஷோ நடத்தி வருகிறார்.
16.ஆஜித் காலிக் (பாடகர்)
விஜய் டிவியின் பிரபலமான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றான சூப்பர் சிங்கர் ஜூனியர் ஷோவில் மூன்றாவது சீஸனின் வெற்றியாளர் ஆஜித் காலிக். இவருக்கு ஆஸ்கார் வெற்றியாளர் இசையம்மைப்பாளர் ஏ ஆர் ரகுமான் கைகளால் விருது வழங்கப்பட்டது.
இவர்கள் தான் நேற்று பிக்பாஸ் வீட்டின் போட்டியாளர்கள். யாரேனும் சீக்கிரட் போட்டியாளர்கள் இருக்கின்றனரா என அடுத்த இரண்டு எபிசோடுகளில் தெரியும்.