
தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி கிரே மேன் படத்தின் டிரெய்லர் வெளியாகும் நிலையில், நெட்ஃப்ளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் படம் வெளியாகும் தேதியும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவெஞ்சர்ஸ் வரிசைப் படங்களின் பிரபல இரட்டை இயக்குநர்களான ஆண்டனி ரூசோ, ஜோ ரூசோ இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தி கிரே மேன். இந்த படத்தில் ரையான் காஸ்லிங், கிறிஸ் இவான்ஸ் போன்ற முன்னணி ஹாலிவுட் நடிகர்கள் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மேலும் அனா டி அர்மாஸ், ஜெசிக்கா ஹென்விக் உள்ளிட்டோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இந்த படத்தில் நடிகர் தனுஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிரபல ஓ.டி.டி நிறுவனமான நெட்ஃப்ளிக்ஸ் சுமார் ரூ. 1500 கோடி பட்ஜெட்டில் இப்படத்தை பிரமாண்டமாக தயாரித்துள்ளது.
ஆக்ஷன் நிறைந்த அதிரடிப் படமாக தயாராகியுள்ள இந்த படத்துக்கு உலகளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்த படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகும் நிலையில் படம் 22-ம் தேதி ஜூலை மாதம் வெளியாகவுள்ளது.
இந்திய ரசிகர்கள் மத்தியில் இந்த படத்துக்கான எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தி கிரே மேன் படம் மொத்தம் 3 பாகங்களாக உருவாக்கப்படவுள்ளது. இதில் தனுஷின் கதாபாத்திரம் பிரதானமாக உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.