தெலுங்கில் நடிகர் சிரஞ்சீவியின் அடுத்த படத்தை மோகன்ராஜா இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் பிரித்விராஜ் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியாகி ஹிட்டான படம் ‘லூசிஃபர்’.
இதில் மோகன்லால் நடித்திருந்தார். இந்த படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் கைப்பற்றியிருந்தார். தெலுங்கில் இந்த படத்தை இயக்க பல முன்னணி இயக்குநர்களின் பெயர் அடிபட்ட நிலையில் தற்போது மோகன்ராஜா அதில் கமிட் ஆகியுள்ளார்.
ரீமேக் படங்களை இயக்குவதில் பெயர் பெற்ற மோகன்ராஜா இதன் மூலம் 20 ஆண்டுகளுக்கு பிறகு தெலுங்கில் களம் இறங்க உள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மோகன்ராஜா, ‘உங்கள் அனைவரின் ஆசிகளோடு இந்த படத்தை இயக்க இருப்பதை இங்கு மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன். மெகா ஸ்டார் சிரஞ்சீவியை இயக்குவதில் எனக்கு பெருமை’ என சிரஞ்சீவியுடன் இருக்கும்படியான ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் மோகன்ராஜா.
இவர் ‘அந்தாதூன்’ ரீமேக்கில் இருந்து சமீபத்தில் விலகியதும் அதன் பிறகு அந்த படத்தை ‘பொன்மகள் வந்தாள்’ இயக்குநர் ஃபெடரிக் இயக்க ஒப்பந்தமானதும் குறிப்பிடத்தக்கது.