பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பரவலால், முக்கிய பிரமுகர்கள் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர் . அரசியல் பிரமுகர்கள், திரை நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள் என பலருக்கும் நோய்த்தொற்று உறுதி ஆகியுள்ளது.
இந்நிலையிக் பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள விடியோவில், கடந்த சில நாட்களாக தனக்கு நோய்த்தொற்று தொடர்பான சில அறிகுறிகள் இருந்ததாகவும், இதையடுத்து மேற்கொண்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியானதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தனது உடல்நிலை சீராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து சென்னை சூளையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தகவல் திரை உலகினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் விரைவில் குணமடைய பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ, யார் வேண்டுமானலும் ரு 100-க்கு மேல் நிதி வழங்கி உதவலாம் என்ற நிதி திரட்டும் முயற்சியை எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மேற்கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.