நானும் பாலியல் தொந்தரவை சந்தித்து இருக்கிறேன் என நடிகை விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.
சென்னை 600028 படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை விஜயலட்சுமி. அதன் பிறகு, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 3ம் இடத்தையும், ஜீ தமிழ் தொலைக்காட்சியின் சர்வைவர் நிகழ்ச்சியில் முதல் இடத்தையும் பெற்று மிகவும் பிரபலமானார். இவர் காதல்கோட்டை இயக்குநர் அகத்தியனின் மகள் ஆவார்.
இந்த நிலையில், வியலட்சுமியிடம் மீ டு குறித்த கேள்விகளை செய்தியாளர்கள் எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “எனக்கும் பாலியல் தொந்தரவு நடந்தது. நான் கராத்தே கற்றுக்கொள்ள சென்ற இடத்தில் அந்த ஆசிரியர் என்னிடம் தவறாக நடந்து கொண்டார். நான் அப்பாவிடம் வந்து சொல்லிவிட்டேன். குழந்தைகளுக்கு சிறுவயதில் இருந்தே குட் டச்,பேட் டச் பற்றி சொல்லிக்கொடுக்க வேண்டும். இதுபோன்ற நேரங்களில் அது பாதுகாப்பைத் தரும்.
சினிமாவை பொருத்தவரை கேஸ்டிங் கவுச் நடைபெறுகிறது. அதாவது, ஒருசிலர் தாமாக முன்வந்து நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களிடம் பேரம் பேசுவதால், எல்லோரிடமும் அந்த கூட்டம் இதை எதிர்பார்க்கத் தொடங்குகிறது. இதில், ஆர்வம் இல்லாத பெண்களுக்கு பாதுகாப்பை உருவாக்கித் தருவதுதான் இதில்(#ME TOO) இருக்கும் அறமாக பார்க்கிறேன்” இவ்வாறு கூறினார்.




