இந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.
1996ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, சுகன்யா, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் இந்தியன். இப்படம் மிகப்பெரும் வெற்றி பெற்ற நிலையில் இந்தியன் 2 எடுக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்தனர். ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று கடந்த 2018ம் ஆண்டு லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இந்தியன் 2 படத்தின் அறிவிப்பு வெளியானது. இதில், காஜல் அகர்வால், பிரியா பவானி ஷங்கர், ரகுல் ப்ரீத் சிங், விவேக் உள்ளிட்டோர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஷூட்டிங் நடந்து கொண்டிருந்த சமயத்தில் படத்தின் உதவி இயக்குநர் உள்பட 3 பேர் கிரேனில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தனர். இதையடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. மேலும், லைகா நிறுவனத்திற்கும், இயக்குநர் ஷங்கருக்கும் மோதல் ஏற்பட்டதால் படப்பிடிப்பு அப்படியே நின்று போனது.
இதை தொடர்ந்து காஜல் திருமணம், கமல் அரசியல் பிரவேசம், விவேக் மரணம் என அடுத்தடுத்த நிகழ்வுகள் அரங்கேறின. இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் சமசர முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து தற்போது இந்தியன் 2 படத்தின் போஸ்டர் மீண்டும் வெளியாகியுள்ளது. இந்தியன் 2 படப்பிடிப்புக்காக எழிலகம் கட்டடத்தில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டுள்ள நிலையில், செப்டம்பர் 1ம் தேதி முதல் நடிகர் கமல்ஹாசன் படப்பிடிப்பில் இணைவார் என்றும், மற்ற காட்சிகள் அதற்குமுன் படமாக்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.




