
ஆஸ்கர் விருது வழங்கும் அகெடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் அண்டு சயின்ஸ் அமைப்பு ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்துக்கு 10 ஆண்டுகள் தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நடப்பாண்டு ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், சிறந்த ஆவணப்படுத்துக்கான விருதை அறிவிக்க பிரபல நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக் மேடையில் தோன்றினார். அப்போது நகைச்சுவை பேச தொடங்கிய அவர், விழாவுக்கு வந்திருந்த வில் ஸ்மித்தின் மனைவியும் நடிகையுமான ஜெடா பிங் ஸ்மித்தின் சிகை அலங்காரத்தை பகடி செய்தார்.
இதனால் கோபமடைந்த கணவர் வில் ஸ்மித், மேடையில் ஏறி கிறிஸ் ராக்கின் கண்ணத்தில் அறைந்தார். இந்த சம்பவம் உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பின்னர் தனது செயலுக்காக வில் ஸ்மித் மன்னிப்பு கேட்டார். மேலும் ஆஸ்கர் அகெடமியில் இருந்து உறுப்பினர் பதவியை அவர் ராஜினாமா செய்துகொண்டார்.
இந்நிலையில் ஆஸ்கர் விருது விழா மற்றும் பிற அகாடமி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வில் ஸ்மித்துக்கு 10 ஆண்டு தடை விதித்து அகெடமி அறிக்கை வெளியிட்டுள்ளது. கலைஞர்கள் மற்றும் விருந்தினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அகாடமி மீதான நம்பிக்கையை மீட்டெடுப்பதற்காகவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அகெடமி தெரிவித்துள்ளது.
இதன்மூலம் பாரம்பரியமாக, சிறந்த நடிகர் விருது பெற்ற ஒரு நடிகர், அடுத்த வருடம் சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்படுபவருக்கு விருதை வழங்குவது வழக்கம். அந்த கவுரவம் வில் ஸ்மித்துக்கு கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.




