சின்னத்திரை சீரியல்களில் அதிக மக்களால் விரும்பி பார்க்கப்படும் சீரியல் செம்பருத்தி. வார நாட்களில் மற்ற சீரியல்களை ஒப்பிடும் பொழுது இந்த தொடர் தான் அதிக டிஆர்பி அள்ளும்.

வெள்ளித்திரையில் பல வெற்றிப்படங்களை கொடுத்த பிரியாராமன் முதன்முதலாக சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்தது செம்பருத்தி சீரியலில் தான். ஆதிக்கடவூர் அகிலாண்டேஸ்வரி என்னும் பெயரால் மக்களை கட்டி இழுத்தார். பளபளக்கும் பட்டுப்புடவை தலை முதல் கால் வரை ஆபரணங்கள் மிடுக்கான ஒப்பனை குடும்ப கௌரவத்திற்காக எதையும் செய்ய துணிச்சல் கொண்டவராக இவரது கேரக்டர்.

ஆதி – பார்வதி
இன்றைய இளசுகளின் கனவு ஜோடியாக இருப்பது ஆதி மற்றும் பார்வதி தான். ஆதி கேரக்டரில் நடிக்கும் கார்த்திக் ராஜ் ஏற்கனவே விஜய் டிவி ஆபிஸ் சீரியலில் நடித்தவர். அந்த தொடரிலேயே அவருக்கென பெண் ரசிகைகள் அதிகம் இருந்தார்கள். பார்வதி கேரக்டரில் நடிக்கும் ஷபானா தனது துறுதுறுவென்ற நடிப்பினாலும் குறும்பு சிரிப்பினாலும் காண்பவர்களை கொள்ளை அடித்து விட்டார். மிகப்பெரிய குடும்பத்தை சேர்ந்த மூத்த மகன் ஆதி தன் வீட்டில் வேலை செய்யும் பெண்ணை காதலித்து திருமணம் செய்வது என்பது சாத்தியமா? அப்படி செய்தால் அவர்கள் வாழ்க்கையில் என்னவெல்லாம் நடக்கும் என்பதே கதை. ஆதி பார்வதியின் காதல் காட்சிகள் இல்லாத வாட்ஸாப்ப் ஸ்டேட்டஸ் இல்லை எனலாம். அந்த அளவுக்கு செல்வாக்குப் பெற்ற ஜோடிகள் தான் இவர்கள். இவர்கள் இருவருமே காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன.

அகிலாண்டேஸ்வரியின் இரண்டாவது மகனாக வருவது அருண் அவரது மனைவி ஐஸ்வர்யா. அருண் கேரக்டரில் நடிக்கும் கதிர் லோக்கல் சேனல்களில் விஜே வாக இருந்தவர். பின்பு ஜீ தமிழில் மானாட மயிலாட நடன போட்டி நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதன் மூலம் அவருக்கு செம்பருத்தி சீரியலில் வாய்ப்பு கிடைத்தது. ஐஸ்வர்யா கேரக்டரில் வரும் ஜனனி அசோக்குமார் நான்கு வருடங்களாக சின்னத்திரையில் இருப்பவர். எனினும் செம்பருத்தி சீரியல் மூலமாகவே அனைவராலும் பிரபலமாக அறியப்பட்டார். முதலில் ஆதியை திருமணம் செய்து கொள்ள நினைக்கும் ஐஸ்வர்யா பல காரணத்தால் அருணை திருமணம் செய்து கொள்வார், அதன் பிறகு அந்த சீரியலின் வில்லியாக இருந்தார். ஆதி – பார்வதி காதலை புரிந்து கொண்டு ஆதரவு காட்டும் கேரக்டராகவும் காட்டப்பட்டார்.
செம்பருத்தி சீரியலில் இருந்து நீக்கப்பட்ட ஜனனி அசோக்குமார்:

கொரோனா காலத்தில் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டதால் ஏற்கனவே எடுக்கப்பட்ட எபிசோடுகள் ஒளிபரப்பப்பட்டன. அதன் பிறகு ஜூலை மாதம் இறுதியில் இருந்து படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டு புதிய எபிசோடுகள் ஒளிபரப்பப்பட்டன. இந்நிலையில் ஜனனி சமீபத்தில் வெளியிட்ட வீடியோவில் தான் செம்பருத்தி சீரியலில் இருந்து நீக்கப்பட்டதாக கூறி கதறி அழுதுள்ளார்.
இந்த வீடியோவில் ஜனனி மிகவும் உருக்கமாக பேசியுள்ளார். தனது நான்கு ஆண்டுகள் சின்னத்திரை வாழ்க்கையில் மூன்று வருடங்களுக்கும் மேலாக தான் ஐஸ்வர்யா கேரக்டருக்காகவே தயார் ஆகி சென்றதாகவும் செம்பருத்தி சீரியல் மூலமாகவே மிகவும் பிரபலம் அடைந்ததாகவும் இப்போது செம்பருத்தி சீரியலை சீரியலின் டீமை மிகவும் மிஸ் செய்வதாக கூறி அழுதுள்ளார். மேலும் மக்கள் தங்களது ஆதரவை தொடர்ந்து செம்பருத்தி சீரியலுக்கு கொடுக்க வேண்டும் எனவும் கண்ணீருடன் கதறி அழுது கொண்டே பேசியுள்ளார்.

பொதுவாகவே ஒரு தொலைக்காட்சி தொடரில் நடித்துக் கொண்டிருக்கும் போது வேறொரு தொலைக்காட்சிக்கு எந்த நிகழ்ச்சிக்காகவும் நடிகர் நடிகைகள் ஒப்பந்தம் ஆக மாட்டார்கள். ஆனால் ஜனனி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நடித்து கொண்டிருக்கும் போதே தற்போது விஜய் டீவியில் சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் மிர்ச்சி செந்திலின் மூன்று தங்கைகளில் ஒருவராக நடித்து கொண்டிருக்கிறார். செம்பருத்தி சீரியலில் இவர் நீக்கப்பட்டதற்கு இதுவே கூட காரணமாக இருக்கலாம். அதையே ஜனனியும் கால்ஷீட் பிரச்சனை என மறைமுகமாக கூறுகிறார்.




