நடிகர் ஷாருக் கானின் மூத்த மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் பயன்படுத்தியாக கூறப்படும் வழக்கில் கைதாகி 3 வாரத்திற்கு பிறகு ஜாமீன் கிடைத்துள்ளது. இந்நிலையில் அவர் இன்று சிறையில் இருந்து ரிலீஸ் ஆகவுள்ளார்.

ஆர்யனின் ஜாமீனுக்காக 3 வாரமாக அயராது பாடுபட்ட அவரது தந்தை ஷாருக் கான், தனது வீட்டைவிட்டுக்கூட வெளியில் வராமல் இருந்தார். ஒரு முறை தனது மகனை மட்டும் சிறையில் சென்று பார்த்து வந்தார். மகனுக்கு சிறையில் உணவு பண்டங்களை வாங்கி கொள்ள நான்காயிரம் ரூபாயை அளித்து விட்டு வந்தார்.
வெள்ளிக்கிழமை ஆர்யனுக்கு ஜாமீன் கிடைத்தவுடன் ஜாமீனுக்காக வாதாடிய வழக்கறிஞர்களுடன் மகிழ்ச்சியாக புகைப்படம் எடுத்துக் கொண்டார் ஷாருக் கான். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. ஆர்யனின் ஜாமீன் செய்தியால் ஷாருக் கான் இல்லமும் விழாக்கோலம் பூண்டது. நூற்றுக்கணக்கான ரசிகர்கள் ஷாருக் கானின் பாந்த்ரா இல்லமான `மன்னத்’ எதிரில் கூடியிருந்தனர்.
ஆர்யன் கானுக்கு ஜாமீன் கிடைத்துவிட்டதாக செய்தி கிடைத்தவுடன் ரசிகர்கள் பட்டாசு வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஷாருக் கானின் இளைய மகன் ஆப்ரஹாம் கான் வீட்டின் பால்கனியில் நின்று ரசிகர்களை பார்த்து கையசைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
ஆர்யனுக்கு ஜாமீன் கிடைக்கப்பட்டதும் நடிகர் மாதவன், சோனுசூட், மிகாசிங் உட்பட ஏராளமானோர் சமூக வலைத்தளத்தில் ஆர்யன் கானுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர். வெள்ளிக்கிழமை(இன்று) ஆர்யன் சிறையில் இருந்து வெளியில் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




